பக்கம்:எனது நண்பர்கள்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கி. ஆ. பெ. விசுவநாதம்  111
 

தில் காங்கிரசிற்குச் செல்வாக்கு ஏற்பட வேண்டுமானால், நாடார் சமூகத்திலிருந்தே காங்கிரசிற்குத் தலைவர்களைக் கொண்டுவர வேண்டுமென்றும் எண்ணியே திரு சத்தியமூர்த்தி ஐயர் அவர்கள் திரு. காமராஜ் அவர்களைக் கொண்டு வந்தாரென அப்போது கூறப்பட்டதுண்டு. ஆனால், அதே சத்தியமூர்த்தி ஐயர் அவர்கள் சமூகத்திற் பிறந்த என் நண்பர் ஒருவர், மதுரை நகரில் அப்போது கூறியது இதுதான்: “ஐஸ்டிஸ் கட்சியின் தலைமைப் பதவியும், செல்வாக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியும் செல்வாக்கும் நாடார் சமூகத்துக்குள் புகுந்து கொண்டன. என்ன செய்வது?” என்பதே. எப்படி இந்தப் பெருமூச்சு.

திரு. காமராஜர் அவர்களின் தன்னலமற்ற சேவையை, திறமையை, நேர்மையை அறிய எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அது பெரியார் காந்தியடிகள் ‘கிளிக்’கென்ற சொல்லம்பை தமிழ்நாட்டில் எய்த காலம். அன்று அவ்வம்பு தன் மீது படாமல், பதவியை உதறித் தள்ளித் தடுத்து நின்றார் காமராஜர். அன்று என் கண்களுக்கு அவர் வீரராக விளங்கினார்; வாழ்த்தினேன்.

அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, அவர் தன்னுடைய தலைமைப் பிரசங்கத்தைத் தமிழ் மொழியில் நிகழ்த்தியதைக் கண்டு என் உள்ளம் குளிர்ந்தது. இந்தியா முழுவதிலுமுள்ள எல்லா மொழியினரும் அங்கு வந்து கூடி இருந்து, திரு காமராஜ் அவர்கள் தமிழில் பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்றசெய்தி.என்னைப் பெருமகிழ்ச்சியடையச்செய்தது. அன்று தமிழகமே உயர்ந்து விட்டதாகக் கருதினேன். ஓர் உருண்டை உணவு அதிகமாக உண்டு மகிழ்ந்தேன். பிறகு, அவரது செல்வாக்கு இந்தியாவின் பிரதம-