பக்கம்:எனது நண்பர்கள்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
116  எனது நண்பர்கள்
 

வைக்கும் என நம்பிச் சும்மா இருந்துவிட்டேன். “மொழி பெயர்க்க ஆள்வந்து விட்டதா?” என்ற கேள்வி தலைவர்களிடமிருந்து என்னிடம் வந்தது. வேறு வழியில்லாமல், அதே மாணவரிடமே சென்று, “தம்பீ, நன்றாக மொழி பெயர்ப்பாயா?” என்றேன். “ஏதோ கொஞ்சம் தெரியும்” எனக் கூறினார். அந்தப் பதிலிலேயே கொஞ்சம் குறும்பும் கலந்திருந்ததாக எனக்குத் தோன்றியதால், சிறிது நம்பிக்கை ஏற்பட்டது.

மொழி பெயர்ப்பு முடிந்து, அருகிற் சென்று பெயர் வினவினேன். ‘அண்ணாத்துரை’ என்றார். மகாநாட்டினர்க்கு மகிழ்ச்சியோடு அறிவித்தேன். வழக்கறிஞரிடஞ் சென்று, “மறுத்தீர்களே. பார்த்திர்களா?” என்று பெருமிதமாகக் கேட்டேன். “மறுத்ததினால்தான் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைத்தார்” எனக் கூறினேன். அவரும் ஒரு சிறு சிரிப்புச் சிரித்தார். சொற்பொழிவு செய்தவரைக் கண்டு “மொழி, பெயர்ப்பு எப்படி?” என வினவினேன். “அதில் சிறிது சன்னப் பொடியும் கலந்திருந்தது” எனக்கூறி புன்னகை புரிந்தார்.

இந்த வகையில் நண்பர் சி. என். அண்ணாத்துரை எம்.ஏ., அவர்களை, முதன் முதலாகப் பேச்சோடு கண்டு மகிழ்ச்சியடைந்தேன். தமிழகத்தின் எதிர்கால நலனுக்கு இத்தகைய கல்லூரி மாணவர்கள் பலர் தேவை என எண்ணினேன். எனது எண்ணம் அன்றும் வீணாக்வில்லை, இன்றும் வீணாகவில்லை, என்றும் வீணாகப் போவதுமில்லை. இது எனது நம்பிக்கை.

கலைத் தலைவன்

கல்லூரியில் வருந்திக் கற்று, “கலைத்தலைவன்” என்ற எம்.ஏ. பட்டமும் பெற்று, பிறகு ஆசிரியர் துறையிலோ வழக்கறிஞர் துறையிலோ, வணிகத் துறையிலோ புகாமல், பொதுவாழ்வுத் துறையில் புகுந்தவர்—தமிழ் நாட்டில் முதன் முதலாக அன்பர் அண்ணாத்துரை ஒருவரே ஆவர். சுருக்கமாகக் கூறவேண்டுமானால், தமிழ்