பக்கம்:எனது நண்பர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118  எனது நண்பர்கள்

மொழிப்பற்று

ஆங்கிலம் கற்றவர்களிற் பலர் அம்மொழியிலேயே ஆழ்ந்து விடுகின்றனர். இரண்டொருவர் கரை ஏறினாலும் அவர்கள் ஏறியது தமிழ்நாட்டுக் கரையாக இருப்பதில்லை. ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க்கரை ஏறிய அறிஞர்களுள் அன்பர் அண்ணாத்துரையும் ஒருவராவர். இத்துறையில் இதற்கு முற்பட்டவர்கள் பா. வே. மாணிக்க நாயக்கர், ச.சோ. பாரதியார், கா சுப்பிர மணியப்பிள்ளை, கோவை சர்.ஆர்.கே. வு.ண்முகம், இன்ஸ்பெக்டர் பவானந்தம் பிள்ளை, சி. கே. சுப்பிரமணிய முதலியார், எஸ். சச்சிதானந்தம்பிள்ளை, கே.எம். பாலசுப்பிரமணியம் முதலியோர் ஆவார். பிற மொழியிற் கண்ட கலை அறிவை தாய்மொழி வளர்ச்சிக்குப் பயன் படுத்துவதே தலையாய மொழிப்பற்று ஆகும். இத் துறையில் அன்பர் அண்ணாத்துரையின் கலை அறிவும், மொழிப்பற்றும் எவராலும் போற்றற்குரியனவாம்.

முறை

பெரியார் ஈ.வெ.ரா அவர்களுடன் நெருங்கிப் பழகிய இயக்க அன்பர்களிற் பலர், வெளியேறிக் கொண்டே இருப்பது வழக்கம். இது முறையாக நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். பிரிந்தவர்களை வெறுத்தும்: பெரியாரை ஆதரித்தும் வந்தவர்களில் நானும் ஒருவன் தான். காலக்கிரமத்தில் நானும் நெருங்கிப் பழகியதால் என்னுடைய முறையும் வந்துவிட்டது. காலியான என் இடமும் உடனே நிரப்பப் பெற்றது. என்னுடைய பணிகளில் காரியதரிசி வேலைக்கு அண்ணாத்துரையும், பொருள் வசூலிக்கப் பொன்னம்பலனாரும், சமாதானம் சொல்ல சாமி சிதம்பரனாரும் அமர்த்தப்பட்டனர், பின்னர் அவர்கள் மூவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வழக்கப்படி அவர்கள் வெளியேறும் முறையும் வந்து விட்டது. ஒரே அறிக்கையில் மூவரும் கையெழுத்திட்டு பெரியாரிடத்திலிருந்தும் ‘விடுதலை’யிலிருந்தும் விடுதலை பெற்றுக் கொண்டனர்.