பக்கம்:எனது நண்பர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136  எனது நண்பர்கள்

“தமிழ் மக்கள் தமிழிசையை வெறுக்க மாட்டார்கள். வெறுப்பவர்கள் தமிழர்களாக இருக்கமாட்டார்கள்” என்று நாங்கள் முழங்கிய முழக்கம் தமிழகம் முழுதும் பரவியது. எதிர்ப்பு அழிந்தது. தமிழிசை இயக்கம் வெற்றி பெற்றது. இது கண்டு தமிழகமே மகிழ்ச்சி அடைந்தது. அடையாறில் உள்ள அவர் அரண்மனை கவர்னர் மாளிகையைவிடப் பெரியது; அழகியது. தம் நண்பர்கள் பலரை அங்கு வரவழைத்து, அன்பும் பண்பும் கலந்து விருந்து அளிக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ராஜா சர் அவர்கள் காலை 5–00 மணிக்கெல்லாம் எழுந்து தன் அரண்மனைக்குள்ளாகவே ஒரு மணி நேரம் 2 மைல் தூரம் நடந்து உடல் நலம் பெறும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தவர்கள் பலரில் நானும் ஒருவன். தமிழகத்தில் எந்தக் கட்சியினர் அரசாங்கம் அமைத்தாலும், செட்டி நாட்டு அரசர் அவர்களின் உதவியைப் பெரிதும் விரும்புவர். அவர்களுடைய துணையின்றி எந்தக் கட்சியும் அக்காலத்தில் நாடு ஆண்டதில்லை. செட்டி நாட்டு அரசர் என்னைக் கட்சியின் தொண்டனாக மட்டும் கருதாமல், தன் குடும்பத்தில் ஒருவனாகவே கருதி நடத்தி வந்தவர். சுருக்கமாகச் சொன்னால், அண்ணன் தம்பி முறையிலேயே வாழ்ந்து வந்தோம் என்று கூறி விடலாம். அவர்கள் என் குடும்ப நலனைக் கருதியும் பொருளாதார யோசனை பலவற்றைக் கூறி என்னை நெறிப்படுத்தியவர். இச்செய்தியில் ஒன்றைக் குமுதம் இதழ் வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. என் பொருளாதாரம் நிலை குலைந்து அழியாமல் இருப்பதற்கு அவர்களது ஆலோசனை பெரும் காரணமாகும்.

ஒரு சமயம், நீதிக்கட்சித் தலைவர் ஒருவர் இரண்டு லட்ச ரூபாயை அரசரிடம் கடன் கேட்க என்னுடைய உதவியை நாடினார். நான் அவரை அழைத்துக் கொண்டு போய் அரசரிடம் பரிந்துரை செய்தேன்.