பக்கம்:எனது நண்பர்கள்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14  எனது நண்பர்கள்
 

பர்களாக வைத்து தமிழ்நாடு நாளிதழை மதுரையில் தொடங்கினார். முதல் தலையங்கம் என் பார்வைக்கு ஆறு நாட்களுக்கு முன்பு வந்தது. அதில் முப்பத்தேழு வடமொழிச் சொற்கள் இருந்தன. அவற்றைக் குறிப்பிட்டு அவற்றுக்குச் சரியான தமிழ்ச் சொற்களையும் குறித்து இருந்தேன். அதைப் பார்த்ததும், அங்கிருந்த ஆசிரியர்களுக்கும், துணை ஆசிரியர்களுக்கும் “தமிழ்நாடு நாளிதழில் தமிழ்சொற்களே இடம் பெறவேண்டும்” எனக் கட்டளையிட்டார். அதன் படியே அது நல்ல தமிழில் வெளிவந்தது. பின் சென்னையிலிருந்தும் மற்றொரு பதிப்பு வெளிவந்தது. மிகப்பெருஞ்செலவு. இத் துறையில் 47 இலட்ச ரூபாய்கள் இழப்பு. அவ்விதமிருந்தும் மன மகிழ்வாகத் தொடர்ந்து நாளிதழை நடத்தி வந்தார். நல்லறிஞர்கள், நாட்டு மக்கள் ஏற்க வில்லை.

உடைந்த உள்ளம்

‘கடைதிறந்தேன் கொள்வோர் இல்லை’ என்ற வள்ளலாரின் கருத்துப்படி நாளிதழ் வெளிவருவது நின்று விட்டது. ஒரு நாள் அவர் கண்கலங்கிச் சொல்லிய சொற்கள் இவை: “கலப்படத்தமிழிலும், கொச்சைத் தமிழிலும் வெளிவருகிற இதழ்களிலும், கவர்ச்சிப் படங்களோடும் நிழற்படச் செய்திகளோடும் வெளிவருகிற தமிழ் இதழ்களிலும் நாட்டம் கொள்ளுகின்ற நம் மக்களின் மனம், நல்ல தமிழில் வெளிவருகின்ற நாளிதழ்களில் சொல்லவில்லையே! இதற்கு என்ன செய்வது? தமிழும் தமிழகமும் எதிர்காலத்தில் என்னவாகும்” என்பதே.

புலவர் குழு

இருபத்திநான்கு ஆண்டுகட்கு முன்பு திருச்சியில் தொடங்கப்பெற்ற கடைச்சங்க காலத்திய புலவர்களைப் போன்ற நாற்பத்தொன்பது புலவர் பெருமக்களடங்கிய தமிழகப் புலவர்கள் குழுவை மதுரைக்கு அழைத்து, தன்