பக்கம்:எனது நண்பர்கள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20எனது நண்பர்கள்

நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்'’ என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணிப் பிள்ளையும், ஐே. எஸ். கண்ணப்பரும் பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்'’ எனக் கோர்ட்டில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள். நான் அதுசமயம் பெரியாரோடு சேர்ந்து இருந்து, சீர்திருத்த இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததனால், அடிக்கடி ஈரோடு செல்ல நேரிடுவதுண்டு. அப்பொழுது இந்தப் பேச்சைப் பற்றியும், மறைமலையடிகளின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் தாக்கி இரண்டு கட்டுரைகள் பெரியாரால் எழுதப்பெற்று அச்சும் கோர்த்துப் பிழைதிருத்தத்திற்காக என்னிடம் வந்தன. செய்திகள் என் உள்ளத்தை வருத்தின. அந்தக் கட்டுரைகளை இப்பொழுது வெளியிட வேண்டாம். அடுத்த வாரம் வெளியிடலாம். அதற்குள் நான் சென்னை போய் வந்துவிடுகிறேன்’ என்று பெரியார் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.

நான் சென்னைக்குச் சென்றதும் திரு. வி. க. அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் என்னைக் கண்டதும் ‘இப்பொழுதுதான் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு வயது நூறு, விடுதலை திராவிடர்கள் பத்திரிகையில் செய்திகளைப் பார்த்திர்களா? நீங்கள் மறைமலையடிகள் கட்சியா? பெரியார் கட்சியா? இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா? அல்லது நீங்கள் தலையிட்டுச் சமரசப்படுத்தப் போகிறீர்களா?'’ என்று கேட்டார். ‘'உங்களைப்பல்லாவரத்திற்கு (அடிகளாரிடம்) அழைத்துப் போகவந்தேன்’ என்றேன். இதைக் கேட்டதும், திரு.வி.க. அவர்கள், இதைவிட எனக்கு மகிழ்ச்சி தரும் வேலை வேறு இல்லை’’ என்று புறப்பட்டார்கள். இருவரும் பல்லாவரத்திற்குச் சென்று மறைமலையடிகளைக் கண்டோம். எங்களைக் கண்டதும் அடிகளார் ஏதோ துன்பத்திலிருந்து மீண்டவர்போலத் துள்ளி