பக்கம்:எனது நண்பர்கள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22எனது நண்பர்கள்

தவறுக்காக அடிகளாரிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் ஒரு செய்தியை எழுதி குடியரசுப் பத்திரிகையில் வெளியிட்டார்கள். பெரியார் அவர்களின் இந்தப் பெருந்தன்மையைப் பாராட்டி மறைமலையடிகளார் எழுதிய கடிதம் இன்னும் என்னிடத்தில் இருக்கிறது. இந்நிகழ்ச்சிகளையெல்லாங் கண்டு அதிகமாக மகிழ்ந்தவர் திரு.வி.க. அவர்களே.

‘நூறாண்டு வாழ்வது எப்படி?’ என்று ஒரு நூலை எழுதி வெளியிட்ட அடிகளார் அவர்கள் 75 ஆண்டுகளில் இயற்கை எய்தினார்கள். அவர்களது உடலை எரியூட்ட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

அவரது உடலை எரியூட்டாமல் அடக்கம் செய்து ஒரு நினைவுச் சின்னத்தை அங்கு எழுப்ப வேண்டும் என்று அவருடைய மகன்கள் மாணிக்கவாசகத்திடமும், திருநாவுக்கரசிடமும் தெரிவித்தேன். அதைக் கேட்டு அவர்கள் வருந்தி ‘அடிகளாரே தமது உடலைப் புதைக்காமல் எரியூட்ட வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறார்கள் அண்ணா” என்று கதறி அழுதார்கள். நானும் கண்ணிர் சிந்தி சென்னையிலிருந்து அங்கு வந்த டாக்டர் மு.வ. உட்பட ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள் கண்ணீர் சிந்திக்கதறி அழ, அழ, அவரது உடலுக்கு எரியூட்டப்பட்டது. நானும் கீழ்க்கண்டவாறு அழுதேன்:

என்று காண்போம்?

அன்பிற்கோர் நிலைக்களமே! ஆர்வலர்க்கோர்
       ஆரமுதே! அடைந்தார் தம்மைத்
தன்பிறவி பெற்ற பயன் தம்மனோர் பெற
       என்றும் தகவு கூறி
அன்புருவாய்த் திகழ்ந்துவந்த ஆன்ற பெரும்
       மறைமலையே! மணியே! நின்றன்
இன்புருவத் திருபுருவைத் தமிழன்பை
       இன் குரலை என்று காண்போம்?