பக்கம்:எனது நண்பர்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28எனது நண்பர்கள்

இந்தத் தமிழ் உடல் தங்கியிருக்க ஒரு சொந்த வீடு இல்லை. வாடகை வீடு. அதிலும் வீட்டைக் காலி செய்யும்படி விட்டுக்காரர் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு விடுத்திருக்கிறார். என்ன செய்வதென்று தெரியவில்லை. நாமெல்லாம் சேர்ந்து நிதி திரட்டி ஒரு வீடு வாங்கி வைப்பது நலமாகும்” என்று டாக்டர் மு. வ. கூறினார்.

அப்படியே செய்வோமென்று செட்டி நாட்டரசருக்கும், மதுரை கருமுத்து தியாகராஜ செட்டியாருக்கும், சர். பி. டி. இராஜனுக்கும், W. P. A. செளந்திர பாண்டிய நாடார் அவர்களுக்கும் நான்கு கடிதங்களை அங்கிருந்து எழுதி அனுப்பி, திருச்சி வந்து சேர்ந்தேன்.

சில நாட்கள் கழித்து கருமுத்து அவர்களிடமிருந்து, ஒரு கடிதம் வந்தது. உடைத்துப் பார்த்தேன், அவர் திரு. வி. க. அவர்களுக்கு அனுப்பியிருந்த பெருந் தொகைக்குரிய காசோலை ஒன்றும், அவர் அதை ஏற்க மறுத்து திரு. செட்டியாருக்கே திருப்பி அனுப்பி எழுதியிருந்த கடிதத்தின்படியும் இருந்தன. திரு. வி. க. கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சொற்றொடர் என்ன தெரியுமா?

‘‘நான் வாழ்நாளெல்லாம் செய்யாத ஒரு தவறை இக்கடைசி நாளில் செய்யும்படி என்னை வற்புறுத்த மாட்டீர்களென நம்புகிறேன்’’ என்பதுதான். இதை, நான் டாக்டர் மு. வ. வுக்கு அறிவித்தேன். அவரும் என்னைப் போலவே இம்முயற்சியைக் கைவிட்டு விட்டார்.

கடைசியாக ஒரு முறை நான் கண்டபொழுது திரு. வி. க. அவர்கள் படுக்கையில் அசைவின்றிக் கிடந்தார். ‘‘கி. ஆ. பெ. வந்திருக்கிறார்’’ என்று டாக்டர் மு. வ. அவர்கள் காதருகில் சென்று உரக்கக் கூறினார். திரு. வி. க. கையை அசைத்து உட்காரச் சொன்னார்.