பக்கம்:எனது நண்பர்கள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32  எனது நண்பர்கள்

இப் பாழாய்ப்போன தமிழ்நாட்டில்தான் திரு. பிள்ளை அவர்களும் பிறந்தார்கள்; அதனாலேயே அவர்களும் இக் கூற்றுக்கு இலக்கானார்கள்.

இன்னும் ஒருபடி தாண்டி, வாழ்ந்தபோது வைது கொண்டிருந்தவர்கள் மாண்டபிறகு மாறி நாட்டிற்கு அவர் பெயரும், ஊருக்கு அவர் சிலையும் வேண்டுமென, ஊருக்கு முன்னே ஓடோடி ஆலோசனைகறும் மக்களுள்ள இத்தமிழ் நாட்டிலே திரு. பிள்ளை அவர்கள் பிறரால் வையப்பெறாமலும் வாழ்த்தப் பெறாமலும் வாழ்ந்துவந்தது ஒரு சிறப்பேயாகும்.

திரு. பிள்ளை அவர்களின் பேச்சு இரத்தக் கொதிப்பையும் நரம்புத் துடிப்பையும் மட்டும் அல்ல, எலும்புகளையும் உருகச் செய்யும். உணர்ச்சி கலந்த அரசியல் ஆவேசப் பேச்சுக்கள் திரு. பிள்ளை அவர்களோடு மறைந்து ஒழிந்தன.

வெள்ளையர் கப்பல்கள் துரத்துக்குடியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் கட்டணத்தை உயர்த்தித் தமிழ் நாட்டு வர்த்தகத்திற்கே கேடு விளைவித்தன. இதனையறிந்த பிள்ளை அவர்கள், அவர்களோடு போராடியும் நியாயத்திற்கு இணங்க மறுத்ததனால், அவர்களோடு போட்டியிட்டுத் தானே ஒரு கப்பலை ஒட்டித் தமிழ்நாட்டு வணிகத்திற்குத் தொண்டு செய்தார்கள்.

அவர் ஒரு தொழிலாளர் தலைவர். தொழிலாளர் போக்கைத் தொடர்ந்து போகும் தலைவராயில்லாமல் தொழிலாளரைத் தன் போக்கில் நடத்திச் செல்லும் தலைவராயிருந்தவர்.

அவர் ஒருமுறை சிறை சென்றபோது, தூத்துக்குடி இரயில்வே நிலையமும், சர்க்கார் கட்டடங்களும் தூள் தூளாக்கப்பட்டன. நெருப்புப் பொறிகளும் பறந்தன. அரசாங்கமே நடுங்கி அஞ்சுகின்ற அளவுக்கு அவர் ஓர் வீரமனிதராகக் கருதப்பட்டார்.