பக்கம்:எனது நண்பர்கள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  37

மகாநாட்டைத் தொடங்கி வைத்து, அவர் ஆற்றிய உணர்ச்சி கலந்த சொற்பொழிவு இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவர் ஆற்றிய அந்தப் பேச்சினைக் கண்டு நடுநடுங்கிய புலவர்களும் அரசியல்வாதிகளும் மிகப் பலர். தலைமை வகித்த நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் முடிவுரை கூறுகிறபொழுது “திரு. பிள்ளை அவர்களின் பேச்சு உணர்ச்சியற்றவர்களுக்கெல்லாம் உணர்ச்சியூட்டியிருக்கும்.’’ என்றார். ‘தமிழ்க்காசு’ விற்கு ‘வீரமகன்’ என்ற பெயரும் வழங்கியது.

அதுவேபோல ‘தாகூர் சட்டத்தை’ விரித்து விளக்கி விரிவுரையாற்றத் தமிழகத்தில் எவரும் துணியாதபோது ‘எம். எல். பிள்ளை’ அவர்கள் அரசின் விருப்பத்தையேற்றுத் துணிந்து முன்வந்து அச்சட்டத்தை விளக்கி விரிவுரையாற்றிப் பெரும்புகழ் பெற்றார். இதனால் அவரை வழக்கறிஞர்களும் நீதிமன்றத் தலைவர்களும் ‘தாகூர் சட்ட விரிவுரையாளர்’ எனக் கூறுவதுண்டு.

திரு. பிள்ளை அவர்கள் தமிழர் சமயம்’ என்று ஒரு நூலை ஆராய்ந்து எழுதியிருந்தார். அதற்கு என்னுடைய மதிப்புரையை வேண்டினார். மறைமலையடிகள், நாவலர், பாரதியார், திரு. வி. க., நாட்டாரய்யா ஆகிய சமயப்பற்று நிறைந்த பேரறிஞர்கள் நால்வருடைய மதிப்புரையே போதுமானதென்றும், சீர்திருத்தப் பற்றுள்ள என்னுடைய மதிப்புரை தேவையில்லை என்றும் தெளிவாகக் கூறி மறுத்து விட்டேன். இது அவர் உள்ளத்தை எவ்வளவு தூரம் புண்படுத்தியிருக்கிறதென்பதை நான் பின்னால் அறிந்து வருந்தினேன்.

திரு. பிள்ளை அவர்கள் நான் பெங்களூரில் தங்கியிருக்கிறேன் என்பதை அறிந்ததும், தன்னிடம் புலவர் வகுப்பில் பயின்று கொண்டிருந்த மாணவர் ஒருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து அங்கு அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது இது:—