பக்கம்:எனது நண்பர்கள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கி. ஆ. பெ. விக்வநாதம்  41
 மையாயிருந்த சோமசுந்தரத்திற்கும் அங்கு வந்திருந்த புலவர் பெருமக்களால் அளிக்கப்பெற்ற பட்டமே ‘பாரதி’ பட்டமாகும். அப்போது சோமுவுக்கு வயது பதினைந்து. சுப்புவுக்கு வயது பன்னிரண்டு. அதுமுதல் இருவரும் சோமசுந்தரபாரதி, சுப்பிரமணிய பாரதி என்றானார்கள். புலவர்கள் வழங்கிய பட்டம் இவ்விருவரின் புலமையை வியந்தேயாகும். பாரதி என்பதன் பொருள், சரசுவதி என்பது. அது கலைமகளை, அவளருளைக் குறிக்கும். எனினும் இவர்கள் அதற்குக் கூறும் விளக்கம் “பாரதத் தாயின் மக்கள் யாவரும் பாரதி” என்பதே.

மாணவ ஆசிரிய பாரதி

இருவரும் தமிழ் இலக்கணம் பயின்றார்கள். தாமாகவே படித்தார்கள். ஓய்வுள்ள போதெல்லாம் படித்தார்கள். சோமுவுக்குச் சுப்பும் சுப்புவுக்கு சோமுவுமே இலக்கண ஆசிரியர்களாகத் திகழ்ந்தார்கள். தமிழ்க்கலையும், அலையும் புரண்டுவரும் காவிரியை அரங்கம் தடுத்து அங்கேயே பிரித்து விட்டதைப் போல, அன்பு புரண்டு வரும் இவ்விருவரையும் ஆங்கிலப் படிப்பு தடுத்து அவ்விடத்திலேயே பிரித்துவிட்டது.

வழக்கறிஞன் பாரதி

சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் பயின்ற சோம. சுந்தர பாரதியார் பி.ஏ. பட்டத்தைப் பெற்றது 1902ஆம் ஆண்டில். அப்போது அவருக்கு வயது 23. அதன் பிறகு, சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல். பட்டமும் பெற்றார். அது 1905ஆம் ஆண்டில். அப்போது சட்டப்படிப்பின் காலம் மூன்று ஆண்டுகளாகும். வழக்கறிஞர் தொழிலை உடனே தொடங்கினார். தொடங்கியது துாத்துக்குடியில். அங்கு 15 ஆண்டுகள் நடத்தியபிறகு, மதுரைக்கு வந்து 10 ஆண்டுகள் வரை இத்தொழிலை நடத்தினார். அக். காலத்தில் இவரது தொழில் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது வழக்கறிஞர் தொழிலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுவந்து, பத்து ஆண்டு-