பக்கம்:எனது நண்பர்கள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54  எனது நண்பர்கள்

செல்வம் திரு.ஐ. குமாரசாமிப்பிள்ளை ஆகியவரிடத்தும், என்னிடத்தும் அவர் கொண்ட நட்பு தனித்தன்மை வாய்ந்தது. அவர் தம்பி தோற்றுவித்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை மிகப்பெரிய அளவில் வளர்த்தும், சங்கத்தில் தமிழ்க் கல்லூரியை நிறுவியும், ஆண்டுதோறும் தமிழ்ப் பேரறிஞர்களை வரவழைத்து ஆண்டு விழா நடத்தியும் அவர் செய்த அருமையான தமித் தொண்டுகளே, என்னை அவர்பால் அன்பு கொள்ளச் செய்தன.

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு தமிழ் இன்றுள்ள நிலையில் இல்லை. மேடையிலும், வீதியிலும், வீட்டிலுங்கூட ஆங்கிலமே பேசுகின்ற காலம். சுருக்கமாகச் சொன்னால் தமிழில் பேச வெட்கப்படுகின்ற காலமெனக் கூறி விடலாம். அக்காலத்தில் தமிழ்த்தொண்டு செய்வது கடினமான ஒன்று. அதிலும் ஆங்கிலத்தில் பயின்று வழக்கறிஞர் பட்டம் பெற்ற அவர் செய்த தமிழ்ப்பணி என்னையே வியப்படையச் செய்தது.

அக்காலத்தில் ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க்கரையேறிய பெரியார்கள் மூவரில் இவர் ஒருவர். மற்ற இருவர், பசுமலை நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்களும் நெல்லை கா. சுப்ரமணியப்பிள்ளை எம்.ஏ., எம்.எல். அவர்களும் ஆவர்.

தமிழ்த்தொண்டு செய்வது எப்படி. என்பதையும், தமிழ்ப்பண்பாடு என்றால் என்ன என்பதையும், நாடு, மக்கள், மொழி, அரசு ஆகியவற்றிற்கு வழிகாட்டக் கூடியவர்கள் தமிழ்ப்புலவர் பெருமக்களே என்ற முடிவான கருத்தையும் நான் அவர்களிடந்தான் கற்றேன். அதுமட்டுமல்ல. விருந்தினர்களை உபசரிக்கும் முறையை நான் என் மனைவியாரிடம் புகுத்தியது தமிழவேள் அவர்களுடைய மனைவியாரிடம் நான் கற்ற பாடமே. இம்முறையில் அவரும் அவருடைய மனைவியாரும் என் ஆசிரியர்கள்.