பக்கம்:எனது நண்பர்கள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58  எனது நண்பர்கள்

களுக்குத் தலைப்பு “திருவாசகம்”. எனக்குத் தலைப்பு “மணிவாசகரும் திருவாசகமும்”. ஏறத்தாழ மூவருக்கும் ஒரே தலைப்பு. இது நடந்த ஆண்டு குறிப்பாகக் கூற முடியவில்லை. என்றாலும், இது ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பது மட்டும் உறுதி. அப்போதுதான் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்களை முதன் முதலாக ஒரே மேடையில் பேச்சோடு கண்டு மகிழும் பேறு எனக்குக் கிடைத்தது.விழா முடிந்த பிற்கு அவர்களின் நல்லாசியையும் பெற்று திரும்பினேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி உய்யக் கொண்டான் திருமலையில் திருக்கற்குடிச் சிவனடியார் திருக்கூட்டத்தின் ஆண்டு விழாவுக்கும் நாங்கள் இருவரும் அழைக்கப்பட்டிருந்தோம். தலைவர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரையா அவர்கள். மாலை ஆறு மணி. நானும் நாட்டாரையாவும் கோவில் திருக்குளத்தில் வழிபாடு (அனுட்டானம்) செய்து கொண்டிருந்தோம். பின்னால் பண்டிதமணி அவர்களும் வழிபாடு செய்வதற்காகக் கையில் கோலை ஊன்றித் தட்டுத் தடுமாறிக் குளத்தின் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர் நடந்து வந்து கொண்டிருந்த இடத்தில் ஒரு படி இல்லாததைக் கண்டு, நாட்டாரையா அவர்கள் செட்டியாரை நோக்கி, அங்கு “படியில்லை படியில்லை” என்று இரு முறை கூறி எச்சரித்தார்கள். அதற்குப் பண்டிதமணி மிகப் பொறுமையாக, “ஏனய்யா! இப்படி சிவன் கோவிலுக்கு வந்தும் படியில்லை என்று கூறுகிறீர்கள்” என்றார்கள். அந்தச் சிலேடைச் சொல்லைக் கேட்டு நாங்கள் இருவரும் பெருநகைப்பு நகைத்து மகிழ்ந்தோம்.

பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார் அவர்கள் பெரும் புலமை வாய்ந்த பேரறிஞர். அவரது ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் சைவ சமயப் புலமையும் கலந்த