பக்கம்:எனது நண்பர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கி. ஆ. பெ. விசுவநாதம்  61

தெரிகிறது நான் சும்மா பார்த்துப் போகலாம் என்று தான் வந்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் உங்களைப் பற்றியும் உங்களுடைய தொண்டுகளைப் பற்றியும் அடிக்கடி என்னிடம் கூறுவார்கள். நான் திருச்சிக்கு வேறு வேலையாக வந்தேன். தங்களைப் பார்க்காமல் போவது நல்லதல்ல என்று எண்ணியே பார்க்க வந்தேன். எனக்கு ஆகவேண்டிய வேலை ஒன்றும் உங்களிடமில்லை. அதற்காகத் தேடி வரவுமில்லை. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பார்த்ததில் எனக்கு அதிக மகிழ்ச்சி. உங்களைப் பார்த்து மகிழ்ந்த இச் செய்தியை நான் பசுமலை நாவலர் சோமசுந்தரம் அவர்களிடம் சொல்லி மகிழ்வேன்” எனக் கூறிச் சென்று விட்டார்கள்.

என் வாழ்நாட்களில் பெரும்பேறு பெற்று மகிழ்ச்சியடைந்த நாட்கள் சில. அவற்றில் ஒன்று பண்டிதமணி அவர்கள் ஒரு வேலையுமின்றி, என் இல்லத்திற்கு வந்த நாளும் ஒன்று.

அதன்பிறகு பண்டிதமணி அவர்களைப் பல்வேறு தடவைகளில் பல்வேறு இடங்களில் சந்தித்து உரையாடியும் மகிழ்ந்திருக்கின்றேன். இன்று என் போன்றவர்களிடம் தமிழ்ப்பற்றும் சமயப்பற்றும் சிறிதாவது காணப்படுமானால் அது பண்டிதமணி அவர்களின் அருந்தொண்டுகளினால் விளைந்தவையாக இருக்கும்.

வாழட்டும் பண்டிதமணியின் தொண்டு!
வளரட்டும் பண்டித மணியின் புகழ்!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/62&oldid=986117" இலிருந்து மீள்விக்கப்பட்டது