பக்கம்:எனது நண்பர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  79

நிலையத்தின் முன் உள்ள கடல் போன்ற ஏரிநீர் முழுதும், மகாநாட்டின் பிரதிநிதிகள் குளித்ததனால் சேறாகி விட்டது என்பது எதிர்க்கட்சியினர் கூறிய புகார். மாநாட்டின் சிறப்பைக் கூற இது ஒன்றே போதுமானது. வரலாறு காணாத பெருஞ்சிறப்புடன் நடைபெற்ற மாநாடு அது. அந்த மாநாட்டின் தலைவர்தான் நமது செளந்திரபாண்டியன். ஆண்டுகள் 40 ஆகியும் அவர் அம்மகாநாட்டில் ஆற்றிய தலைமை உரை இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கொடைக்கானல் மோட்டார் யூனியன்

இன்று கோடைரோடு ரயில் நிலையத்திலிருந்து, கொடைக்கானல் மலைக்கு ‘கொடைக்கானல் மோட்டார் யூனியன், பஸ் போக்குவரத்து இருந்து கொண்டிருக்கிறது. அது தொடங்கியது திரு. செளந்திர பாண்டியர் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோதுதான். கோடைமலைக்குப் பஸ் போகாதிருக்க வந்த எதிர்ப்புகள் இமய மலை அளவு. அதை நிலை நிறுத்தியவர் செளந்தர பாண்டியர். அந்த நிறுவனம் உள்ளவரை அவரது பெயரும் மறையாது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

திரு. பாண்டியனார் ஜில்லா போர்டு தலைவராக இருந்து போது, ஒரு உறுப்பினர் அவர்மீது நம்பிக்கையில்லாத் திர்மானம் போர்டு கூட்டத்தில் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார். அன்று கூட்டத்திற்குத் தலைமை வகிக்க வந்த பாண்டியர், கூட்ட நிகழ்ச்சியைத் தொடங்காமல், முதலில் தன் இராஜினமாக் கடிதத்தைப் படித்து விட்டு விலகிக்கொண்டார்.

“தீர்மானம் கூட்டத்திற்கு வருகிறதா இல்லையா என்பதும், வந்தாலும் யாராவது ஆதரிப்பாரா என்பதும் தெரியவில்லை. அதற்குள் நீங்கள் இராஜினாமா செய்வது சரியல்ல” என்று ஒருவர் சொன்னார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/80&oldid=986329" இலிருந்து மீள்விக்கப்பட்டது