பக்கம்:எனது நண்பர்கள்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
92  எனது நண்பர்கள்
 

பதவியை உதறி எறிந்து வெளியேறினர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் அரசியலில் இடமிராது என்பதை, திரு. ஒ. பி. ஆர். அவர்களின் வரலாறும் மெய்ப்பித்துக் காட்டியது.

கேள்வி

திரு ரெட்டியாரவர்களைப் பற்றி நான் எவ்வளவு கேள்விப்பட்டிருந்தேனோ அந்த அளவிற்குத்தான் என்னைப் பற்றியும் அவர் கேள்விப்பட்டிருக்கிறார். எனினும் நாங்களிருவரும் நேரில் சந்தித்ததோ பேசியதோ இல்லை. காரணம்; நாங்களிருவரும் நேர்மாறான அரசியல் கட்சிகளில் பணி புரிந்து கொண்டிருந்ததுதான்.

முதற் சந்திப்பு

செங்கற்பட்டு இரயில் நிலையத்தில் ஒரு நாள் காலை திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்லும் விரைவு வண்டி நின்று கொண்டிருந்தது. காலை உணவுக்காக நான் வண்டியை விட்டிறங்கிச் சிற்றுண்டி நிலையத்தை, நோக்கி நடந்துகொண்டிருந்தேன், அப்பொழுது திரு. ரெட்டியார் வண்டியை விட்டிறங்கி உலவிக் கொண்டிருந்ததைப் பார்த்தும், விரைவாக நடந்து ஒதுங்கிச் சென்றேன். நான் அவருக்கு முன்னே விரைவாக நடந்து செல்வதைக் கண்டதும் கைதட்டிக் கூப்பிட்டு, “என்ன ஐயா! பார்த்தும் பாராமற் போவதும் ஒரு பண்பாடா?” எனக் கேட்டார். ஆம். பார்த்தேன். இதிற் பண்பாடு ஒன்றும் இல்லை; அச்சம்தான் காரணம்’ என்றேன். “என்ன அச்சம்” என்றார். “நீங்கள்,மாறுபட்ட கட்சியினர். அதிலும் முதலமைச்சர். நெருங்குவதற்கு ஒரு அச்சம். காலை உணவு கிடைக்குமோ? வண்டி புறப்பட்டு விடுமோ என்பது மற்றொரு அச்சம்” என்றேன். அவர் கலகலவெனச் சிரித்து “இரண்டச்சமும் வேண்டியதில்லை. நில்லுங்கள்” என்றார். அவருக்கு வந்த சிற்றுண்டியை நானிருக்கும் வண்டியில் வைக்கச் சொல்லிவிட்டுத்