பக்கம்:எனது நண்பர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98  எனது நண்பர்கள்

அவர் ஒரு எழுத்தாளர். நீதிக்கட்சியின் ‘‘ஜஸ்டிஸ்’’ பத்திரிகையின் ஆசிரியர், அப்பத்திரிகையின் தலையங்கத்தை அவரது ஆங்கில நடையழகைச் சுவைப்பதற்காகவே பலர் வாங்கிப் படிப்பதுண்டு.

அவர் ஒரு பேச்சாளர். அவர் ஆங்கிலத்தில் பேசுகின்ற முறையை, நடையை, அழகை ஐரோப்பியர் பலர் பாராட்டி மகிழ்வர். அவருடைய சகோதரர்களின், மகன்களின் ஆங்கிலப் பேச்சும் அவரது நடையைப் பின் பற்றியதாகவே இருக்கும்.

அக்காலத்துக் காங்கிரஸ் இயக்கத்தில் காமராஜ் அவர்களின் தலைவர் சத்தியமூர்த்தி ஒருவரே தலைசிறந்த பேச்சாளர், ஜஸ்டிஸ் கட்சியையும், ஜஸ்டிஸ் கட்சியினரையும் கடுமையாகத் தாக்கிப் பேசிப் பெயர் பெற்றவர் அவர் ஒருவரே. அவருடைய பேச்சுக்குப் பதில் கூறும் போதெல்லாம் திரு. ஏ. ஆர் முதலியார் “மை எக்ஸ்டீம்டு பிரண்டு” (எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்) என்று குறிப்பிட்டே பேசுவார். இந்த அவரது பெருந்தன்மையை அக்காலத்து அரசியல்வாதிகள் அனைவரும் பாராட்டிப் பேசுவதுண்டு.

கட்சியின் கொறடாவாகவும் சில ஆண்டுகள் பணி புரிந்தவர். கட்சியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்த போது அவர் நடந்துகொண்ட முறையும், பேசிய பேச்சும் காட்டிய திறமையும் இன்றும் என் கண்முன்னே நிற்கின்றன.

திருச்சியில் நான் நடத்திய ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் இவருடைய ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்க்க ஒருவரை, ஏற்பாடு செய்யும்படி என்னிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தார். நான் பலரை அணுகினேன். மறுத்து விட்டார்கள். கட்சியின் வழக்கறிஞர் பலரும் மொழி பெயர்க்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் ஒரு கல்லூரி மாணவர் நான் மொழிபெயர்க்கிறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/99&oldid=986168" இலிருந்து மீள்விக்கப்பட்டது