பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

 1950-இல் நாடகக் குழுவுக்கு, ‘மூடுவிழா’ நடத்தியதும், மீண்டும் தொடர்ந்து ‘ஸ்பெஷல்’ நாடக முறையில் புதிய பல நாடகங்களை நடத்தி வந்ததும் எங்கள் நாடக வாழ்வின் பொற் காலமாகும். வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் சென்று உலாவந்த பெருமைக்குரிய நிகழ்ச்சிகள், அந்தக் காலகட்டத்தில் தான் வருகின்றன. எனவே இரண்டாம் பாகம் மேலும் சுவையாகவும் பயனுடையதாகவும் இருக்குமென்பதில் ஐயமில்லை.

அதனை எழுத என்னை வாழ்விக்குமாறு இறைவனை வேண்டுகிறேன்.

எனது நாடக வாழ்க்கையை எனது கண்ணோட்டத்திலே தான் எழுதியிருக்கிறேன். இதன் முழுப்பொறுப்பும் என்னைச் சார்ந்தது. சகோதரர்களின் கண்ணோட்டத்தில் பல செய்திகள் இதில் விட்டுப் போயிருக்கவும் கூடும்.

எங்கள் குழுவிலிருந்த. என்னோடு தொடர்புகொண்ட-நான் கண்டு மகிழ்ந்த எல்லா நாடக நடிக-நடிகையரைப் பற்றிய செய்திகளும் ஒரளவுதான் இதில் இடம் பெற்றுள்ளன. பெருமைக் குரிய நாடகக் கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் நான் தனியாகவே கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் தனி நூல்களாக வெளிவரும்.

என்னோடு தொடர்பு கொண்ட எத்தனையோ நண்பர்கள் இதில் விடுபட்டுப் போயிருக்கலாம். எனக்கே தெரிகிறது. பாரங்கள் அச்சான பிறகுதான் சிலருடைய பெயர்கள் நினைவுக்கு வந்தன. நூலில் இடம் பெறுவதற்குத் தகுதியும் உரிமையும் உடைய கலைஞர்கள், நண்பர்கள் அன்பு கூர்ந்து எனக்கு நினைவூட்டுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். அவர்களின் பெயர்களை அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்வேன்.

மணிவிழாவிலே எனது நாடக வாழ்க்கை கட்டாயம் வெளிவர வேண்டும் என்று என்னைவற்புறுத்திய தலைவர் சிலம்புச்செல்வர் அவர்கட்கும், பெருமைக்குரிய மாணவர் கலைஞர் ஏ.பி. நாகராஜன், மருகர் நகைச்சுவைச்செல்வர் டி. என். சிவதாணு, தம்பி பகவதி ஆகியோருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்த நூலை வெளியிடுவதில் வானதி பதிப்பக உரிமையாளர் அன்பர் திருநாவுக்கரசு அவர்கள் காட்டிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அடேயப்பா!