பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


“என்ன முத்து! நடிக்கமுடியுமா?” ......இது முதலாளியின் கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதிலே கிடைக்கவில்லை. அண்ணாவால் பேசவே முடியவில்லை. கேள்விக்கு விடையாக ஒருமுறை வாந்தியெடுத்தார். அன்று அவரை வள்ளி வேடம் போட்டு நாடகம் நடத்த இயலாதென்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்த யோசனை?...

“ஏண்டா பசங்களா! யாராவது வள்ளியாக நடிக்கிறீங்களாடா? இல்லேன்ன நாடகத்தை நிறுத்த வேண்டியதுதான்...” அடிக்கடி இப்படி யாருக்காவது உடல் நலமில்லாது போனால் அடுத்த வேடத்தைப் புனைய ‘நான் முந்தி நீ முந்தி’ என்று நடிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வருவது வழக்கம். எல்லோரும் அநேகமாக எல்லா நாடகப் பாடங்களையும் ஒரளவுக்குக் கேள்வியிலேயே நெட்டுருப் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால், இன்று முதலாளியின் கேள்வி, பலர் வாயிலாகமீண்டும். மீண்டும் எதிரொளித்ததே தவிர யாரும் நடிக்க முன்வரவில்லை.

யார் வள்ளி?

மணி 9 ஆகிவிட்டது. நாடகத்திற்கு அன்று நல்ல வசூல். நடிகர்கள் எவரும் தாமாக முன்வராததால், சில நடிகர்களை. அணுகி வள்ளியாக நடிக்கும்படி முதலாளிகள் வற்புறுத்தியும் பார்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை.

அப்போது குழுவில் இருந்தவர்களில் நான் மிகச் சிறுவன். எனவே என்னை யாரும் கேட்கவில்லை “நான் வேண்டுமானல், நாரதராக நடிக்கிறேன்” என்றார் ஒரு நடிகர். ஏற்கனவே ஒரு தடவை நான் நோயுற்றிருந்தபோது நடித்தவர் அவர். இன்னும் சிலரும் நாரதராக நடிக்க முன்வந்தார்கள். நான்தான் எப்பொழுதும் நாரதராக நடிப்பது வழக்கம்.

பல நாரதர்கள் முன் வந்ததும், “சண்முகம் வள்ளியாக நடிக்கட்டுமே” என்றது ஒரு குரல்.

“ஆ! சரியான யோசனை! அவன் நடித்துவிடுவான் அண்ணா. முதல் மணியை அடிக்கச் சொல்லுங்கள். சண்முகம்தான் வள்ளி” என்றது மற்றொரு குரல்.