பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


அந்த ஊரிலேயே சில நாட்களில் எங்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டது. சின்னண்ணு கம்பெனியின் பிரதம நடிகராய் விட்டதால் அவரது சம்பளம் மாதம் எட்டு ரூபாய்களிலிருந்து இருபத்தி ஐந்து ரூபாய்களாக உயர்ந்தது. எனக்கும் அதே சம்பளம் போடப்பட்டது. தொடக்கத்தில் எங்கள் எல்லோருக்கு மாக மொத்தச் சம்பள வரவு தொண்ணுாற்றி எட்டு ரூபாய்கள். இப்போது மொத்தம் எல்லோருக்கும் நூற்றி நாற்பது ரூபாய்கள் சம்பளம் கிடைத்தது.

ஆசிரியர் குப்புசாமி நாயுடு

வேலூரில் திரு. கே.ஜி.குப்புசாமிநாயுடு கம்பெனிக்கு ஆசிரியராக வந்து சேர்ந்தார். இவர் சுவாமிகளின் மாணாக்கர்களில் ஒருவர். மிகச் சிறந்த பெண்வேடதாரியென்று பலரும் புகழுவார்கள். "தாராச சாங்கம்" நாடகத்தில் ‘தாரை'யாக நடிப்பதில் சிறந்து விளங்கியதால் தாரை குப்புசாமி நாயுடு என்றே இவரைக் குறிப்பது வழக்கம். கம்பெனிக்கு வந்து சேர்ந்த சமயத்தில் இவர் வேடம் புனைவதை நிறுத்திவிட்டு நாடகாசிரியராகவே பணி புரிந்து வந்தார். ஒருநாள் இவர் சுவாமிகளைப் பார்க்க வந்திருந்தார். வந்த இடத்தில் சுவாமிகளுடைய விருப்பத்தின்படி கம்பெனியில் இருக்க ஒப்புக்கொண்டார். கே. ஜி. குப்புசாமி நாயுடு சேர்ந்தபின் மற்றுஞ் சில புதிய நாடகங்கள் தயாராயின. அவற்றில் முக்கியமான நாடகம் ஞானசெளந்தரி, வேலூர் முடிந்ததும் பிரஞ்சிந்தியாவைச் சேர்ந்த பாண்டிச்சேரிக்குப் பயணமானோம்.

ஞானசெளந்தரி நாடகம்

பாண்டிச்சேரியில் எனக்கு ஞானசெளந்தரி பாடம் கொடுக்க பெற்றது. சின்னண்ணாவுக்கு ஞானசெளந்தரியின் சிற்றன்னை ‘லேனாள்’ பாடம் கொடுத்தார்கள். பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே அவசர அவசரமாக இந்தப் புது நாடகத்தை அரங்கேற்ற முயற்சியெடுத்துக் கொண்டார்கள். பாடத்தை நெட்டுருப் பண்ணுவதற்குக்கூட நாட்கள் போதாது. மிகவும் துரிதப் படுத்தினர்கள். ஞானசெளந்தரி மிகப் பெரிய பாடம். பாடத்தைப் பார்த்தவுடனேயே எனக்குப் பயமாக இருந்தது. நாடகத்தில் ‘லேனா'ளின் சூழ்ச்சியால் ஞானசெளந்தரியின் இருகைகளும்