பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


வெட்டப்படுகின்றன. பாதி நாடகம் முழுதும் ஞானசெளந்தரி கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டே நடிக்கவேண்டும். இந்த விஷயத்தைக் கேட்டவுடன் எனக்கு மேலும் பயம் அதிகரித்தது. பாடம் கொடுத்தவுடனேயே நாடகத்திற்குத் தேதியும் குறித்து விட்டார்கள். ஒத்திகைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

கடுக்கன் பரிசு

நாடக அரங்கேற்றத்திற்கு இன்னும் இரண்டே நாட்கள். நான் சரியாகப் பாடத்தை நெட்டுருப் பண்ணவில்லை. முதலாளி கருப்பையாபிள்ளை எங்கள் வீட்டுக்கு வந்தார். ஒரு ஜதைக் கடுக்கன்களை என்னிடம் கொடுத்தார். அதன் விலை பத்து ரூபாய், அப்போது பாண்டிச்சேரியில் ஒரு பவுனின் விலையே பதின்மூன்று ரூபாய்கள்தான். அரைப் பவுனில் செய்யப்பட்டிருந்த அந்த ஐந்து கல்பதித்த கடுக்கனைக் கண்டதும் எனக்கு மிகவும் ஆசை உண்டாயிற்று. வாங்கித் தரும்படி அப்பாவிடம் வற்புறுத்தினேன். உடனே கருப்பையாபிள்ளை “ஞானசெளந்தரி பாடத்தை நாடகத்தன்று சரியாக ஒப்பித்து விட்டால் இதை உனக்கு இனமாகவே கொடுத்து விடுகிறேன்” என்றார்.

வேலூரில் வள்ளி நாடகத்தின்போது ஐந்து ரூபாய்கள் செய்த அற்புதத்தைப் பார்த்தாரல்லவா? இம்முறையும் அவருடைய யோசனை பலித்தது. கடுக்கன் போட்டுக்கொள்ளவேண்டு மென்ற ஆசையில் ஒரே மூச்சாக உட்கார்ந்து ஞானசெளந்தரி பாடத்தை நெட்டுருப் போட்டு விட்டேன். வாக்களித்தபடி கடுக்கனைப் பரிசாகப் பெற்றேன்.

முதல் நாடகத்தன்று பிலேந்திரன் ஞானசெளந்தரியைக் காட்டில் சந்தித்து அழைத்துப் போகும் காட்சியில், ஞாபக மில்லாமல் பின்னல் கட்டிக் கொண்டிருந்த கைகளை வெளியே எடுத்து விட்டேன். சபையோர் கொல் வென்று சிரித்து விட்டார்கள். இரண்டாவது நாடகத்திலிருந்து முன் ஜாக்ரதையாக என் கைகள் வெட்டப்பட்டவுடன், கைகளிரண்டையும் பின்புறமாகச் சேர்த்து வைத்து, நாடா போட்டுக் கட்டி விட்டார்கள்.

சுவாமிகளின் நாடக ஆர்வம்

பாண்டிச்சேரியில் சுவாமிகளின் உடல்நிலை சுமாராக இருந்தது. அவரும் அடிக்கடி நாடகங்களுக்கு வருவார். உள்ளே