பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


கரகோஷம் செய்து பாராட்டினார்கள். காட்சி முடிந்து உள்ளே வந்ததும் சுவாமிகள் சின்னண்ணாவைக் கூப்பிட்டார். அவருக்குப் பயந்தான். தன்னுடைய தவறுதலுக்காகச் சுவாமிகள் கோபித்துக் கொள்வாரென்றெண்ணி நடுங்கிக்கொண்டே வந்து நின்றார், சுவாமிகள் அண்ணாவை அருகில் அழைத்து, கண்களில் மகிழ்ச்சிப் பரவசத்துடன் இடது கையால் தட்டிக் கொடுத்தார்.

‘ரம்’ செய்த ரகளை

பாண்டிச்சேரியில் காமாட்சியம்மன் கோயில் தெருவில் நாங்கள் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுக்கு அடுத்தாற்போல் ஒரு பிரபல வழக்கறிஞர் வசித்து வந்தார். அவருக்கு நாடகக்காரர்கள் என்றாலே பிடிப்பதில்லை, நாங்கள் அடிக்கடி பாடிக் கொண்டிருப்போம். எங்கள் வீட்டுச் சுவரையொட்டினாற் போலிருந்தது அவரது படுக்கையறை. அந்த வழக்கறிஞர், நாடக மில்லாத நாட்களில் இரவு நேரங்களில் நாங்கள் பாடும்போதெல்லாம் ஏதாவது முணு முணுத்துக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் எங்கள் தந்தையார் ‘ரம்’ என்னும் ஒரு புது வகையான மதுவைக் குடித்து விட்டு வந்திருந்தார். போதை தலைக்கேறி விட்டது; ஒரே குஷி, இரவு ஒன்பது மணி: தமது கெம்பீரமான குரலையெழுப்பிப் பாடத் தொடங்கினார். அவரது பாட்டைக் கேட்டவுடன் வழக்கறிஞருக்குப் பிரமாதக் கோபம் வந்து விட்டது. ஆங்கிலமும், தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில் ஏதேதோ ஏசத் தொடங்கினார். இரவு ஒன்பது மணிக்குமேல் “இப்படிக் கழுதைபோல்கத்தினால் நாங்கள் எப்படித் துரங்குவது?” என்று சத்தம் போட்டார். வீட்டு வாசவில் ஒரே குழப்பம். எங்கன் தாயார் வழக்கறிஞரைச் சமாதானம் செய்தனுப்பினார்.

நள்ளிரவில் கச்சேரி

தந்தையார் பாடுவதை நிறுத்திவிட்டு, அவசரமாக வெளியே சென்றார், நாங்கள் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் வீட்டிலேயே முத்துக் கன்னி மேஸ்திரி என்ற கம்பெனியின் தையல்காரரும் தம் மனைவி யோடு குடியிருத்தார். மேஸ்திரி அப்பாவுக்கு நண்பர். எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் வெளியே போய்வருவது வழக்கம். அன்று மேஸ்திரியும் நல்ல குடிபோதையில் இருந்தார். அப்பா