பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


மேஸ்திரியை வீட்டுக்குக் காவல் வைத்து விட்டுத் தனியாக வெளியே சென்றதால் எங்களுக்கு மேலும் வியப்பாக இருந்தது. பதினைந்து நிமிடங்களில் இரண்டு புஷ் வண்டிகள் வந்து வாசலில் நின்றன. அவற்றில் ஆர்மோனியம் திரு வைத்திலிங்கம் பிள்ளையும், மிருதங்கம் திரு துரைசாமி நாயுடுவும், கம்பெனியில் அப்போது மிகவும் பலசாலியென எல்லோராலும் கருதப் பெற்ற திரு கோபால பிள்ளையும் வந்து சேர்ந்தார்கள்.

புஷ்வண்டி என்பது ரிக்‌ஷாவைப் போன்று மனிதர்கள் இழுக்கும் வண்டிதான். ரிக்‌ஷாவை முன்னால் நின்று இழுத்துச் செல்வார்கள். இது நாலு சக்கிர வண்டியாதலால் பெரும்பாலும் பின்னல் நின்று தள்ளிச் செல்வது வழக்கம். வண்டியில் உட்கார்ந்திருப்பவர்களே தம் கையில் முன்னாலுள்ள கம்பியைப் பிடித்துக் கொண்டு வண்டியைச் செலுத்த வேண்டும். இந்தப் புஷ் வண்டி அப்போது, பாண்டிச்சேரியிலும் கடலூரிலும் காணப்பட்டது. இப்போது நான் பார்த்ததாக நினைவில்லை.

புஷ் வண்டிகளில் ஆர்மோனியம் மிருதங்கத்துடன் இவர்கள் எல்லோரும் வந்ததும் என்ன நடக்குமோவென நாங்கள் பயந்து விட்டோம். இரவு மணி பத்திருக்கும். வீட்டுக்குள் கச்சேரி தொடங்கியது. தந்தையார் தம்மால் முடிந்த மட்டும் மேலே குரலெழுப்பிப் பாடினார். வைத்திலிங்கம் பிள்ளையும் துரைசாமி நாயுடுவும் அவரோடு சேர்ந்து வாசித்தார்கள். முத்துக்கன்னி மேஸ்திரியும், கோபால் பிள்ளையும் வீட்டு வாயிற் படியில் கையில் தடியோடு காவல் புரிந்தார்கள்.

வழக்கறிஞரின் மன்னிப்பு

வழக்கறிஞர் வெலவெலத்துப்போய்விட்டார். அவர் ஆர்ப் பாட்டமெல்லாம் அடங்கி விட்டது, சண்டைக்குக் கச்சை கட்டி நிற்பதைக் கண்டதும், அவர் குரல் கீழே இறங்கிவிட்டது. உள்ளே நடக்கும் கச்சேரியைக் கேட்க வீதியில் ரசிகர்கள் கூடிவிட்டார்கள். பிறகு வழக்கறிஞர், முத்துக்கன்னி மேஸ்திரியிடம் வந்து சமாதானமாகப் பேசினார்.முதலில் தாம் ஏசிப் பேசியதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். எப்படியாவது இந்தக் கச்சேரியை, நிறுத்தினால் போதும் என்றாகி விட்டது அவருக்கு. கோபாலபிள்ளை