பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99


பாண்டிச்சேரியில் நாடகங்களுக்கு நல்லவரவேற்பிருந்தது . பாண்டிச்சேரி முடிந்து திண்டிவனம் சென்றோம். அங்கும் நல்ல வசூல். சென்னையில் வசூல் இல்லாமல் கஷ்டப்பட்ட நிலை மாறி விட்டது. தொடர்ந்து வேலூர், பாண்டிச்சேரி, திண்டிவனம் ஆகிய மூன்று ஊர்களிலும் நல்ல வசூலாயிற்று. கருப்பையா பிள்ளை மற்ற முதலாளிகளை விடக்கொஞ்சம் தாராளமான மனம் உடையவர்: நுணுக்கம் தெரிந்தவர். அவரும் காமேசுவர ஐயரும் தாம் இப்போது கம்பெனியை நிருவகித்து வந்தார்கள். உழைப்புப் பங்காளியான பழனியாப் பிள்ளை ஒன்றுஞ் செய்யத் தோன்றாது அவர்களோடு பேருக்கு ஒத்துழைத்தார்.

ஏ. கே. சுப்பிரமணியன்

திண்டிவனத்தில் பாட்டா இராமகிருஷ்ணன், கம்பெனியை விட்டுப் போய்விட்டார். அவருடைய ஸ்தானத்தை அருப்புக் கோட்டை ஏ. கே. சுப்பிரமணியன் பெற்றார். சுப்பிரமணியன் மிகச் சிறந்த பாடகர், நல்ல வளமான சாரீரம்; இயற்கையாகவே அவருடைய குரலில் ‘பிருகா’ பேசும். சென்னைக்கு வந்தவுடனேயே பல நாடகங்களில் சுப்பிரமணியன் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி விட்டார், இப்பொழுது பாட்டா இராம கிருஷ்ணன் போய்விட்டதால், எல்லா வேடங்களும் அவருக்கே கொடுக்கப் பெற்றன. சுப்பிரமணியன் நடித்த சத்யவான், கோவலன், வள்ளி நாடகத்தில் வேலன் - வேடன் - விருத்தன் முதலிய பாத்திரங்களில் அவர் பாடிய பாடல்கள் இன்னும் என் நினைவை விட்டு அகலவில்லை. விருத்தங்கள் பாடும்போது அவர் ரசிகர்களிடத்தில் கரகோஷம் பெறுவார். இளம்பருவத்தின்றாகிய சுப்பிரமணியனின் அபாரமான இசைத் திறமை அந்த நாளில் எல்லோராலும் பாராட்டப் பெற்றது.

திண்டிவனத்தில் கண்டம்

திண்டிவனத்தில் எனக்கு ஒருபெரிய கண்டம் ஏற்பட்டது. ஒருநாள் ‘இலங்காதகனம்’ நாடகம் நடந்து கொண்டிருந்தது. தான் முதலில் இலட்சுமணனுகவும் கடைசியில் அட்சய குமாரனாகவும் நடிப்பது வழக்கம். அந்த நாளில் தனியே உட்கார்ந்து ஒருவரோடு ஒருவர் அரட்டையடிப்பது இல்லை. பெரும்பாலும்