பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

என்ன சுறுசுறுப்பு! விரைவாகச் செயலாற்றுவதில் அவருக்கு இணை அவரேதான். திருநாவுக்கரசு அவர்களை ஒரு பதிப்பக உரிமையாளராக - வணிகராக மட்டும் நான் கருதவில்லை. அவர் ஒர் அருங்கலைஞர். ஆம், பல்வேறு கலைப் படைப்புகளைத் தமிழுலகுக்குத் தந்த அவர், எனது நாடக வாழ்க்கையினையும் ஒர் உயர்ந்த கலைப்படைப்பாகவே வெளியிட்டிருக்கிறார்.

அந்த அருமைக் கலைஞருக்கு என் உளமார்ந்த நன்றி.

இந்நூலை வெளியிடுவதில் எனக்குப் பேருதவியாளராக உடனிருந்து பணியாற்றியவர் கவிஞர் தே. ப. பெருமாள் அவர்கள். அவர் எனது நீண்டநாளைய நண்பர். என் உள்ளத்தை உணர்ந்தவர். அவ்வப்போது எனக்கு ஆலோசனைகள் கூறி உறுதுணை புரிந்தவர். உன்னிப்போடு பிழைதிருத்திப் பெரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அவருக்கு என் நன்றி உரித்தாகட்டும்.

நூலினை அச்சிட்ட மூவேந்தர் அச்சக உரிமையாளர் திரு முத்து அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர். ஊக்கம் நிறைந்தவர். எத்தனைமுறை பிழைதிருத்தம் செய்தாலும்முகங்கோணாமல் மிகுந்தபொறுமையோடும் பொறுப்போடும் இந்நூலை அச்சிட்டுத்தந்தார். அவருக்கும், அச்சகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

இனி, பாடுபட்டு உழைத்து உருவாக்கியுள்ள இக்கலைப் படைப்பினை வாசக நண்பர்களும், படிப்பகத்தாரும், நூலகத் தாரும் வாங்கி, விரைவில் அடுத்த பதிப்பு வெளிவரவும், இரண்டாவதுபாகத்தை உற்சகாத்தோடுவெளியிடவும் அன்பர்திருநாவுக்கரசு அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இந்நூலுக்கு முன்னுரை எழுதி என்னைச் சிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கட்கும், அணிந்துரை தந்து எனக்கு ஆசி கூறிய தலைவர் சிலம்புச் செல்வர் அவர்கட்கும் என் இதயம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

‘அவ்வை அகம்’
சென்னை-86
தி. க. ஷண்முகம்
திருவள்ளுவர் ஆண்டு 2003 சித்திரை 8௳