பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

களும் நிரந்தரமாக இருந்து வந்தார்கள். நாங்கள் சைதாப் பேட்டைக்கு வந்த நாளிலிருந்தே பாவலரின் தரகர்கள் எங்களுக்கு வலைவீசத் தொடங்கினார்கள். ஒரு நாள் எங்களுக்கு நாடகமில்லாத நாளில் அப்பாவுடன் சென்னைக்குப் போய் பாவலர் கம்பெனியின் நாடகத்தைப் பார்த்து வந்தோம். பாவலர் குடிப்பழக்கம் உள்ளவர். எங்கள் தந்தையாரோ கேட்கவே வேண்டியதில்லை. இருவரும் மிக விரைவில் தோழமை கொண்டு விட்டார்கள்.

வலை வீசும் படலம்

‘பாவலர் கம்பெனிக்குப்போக வேண்டும்’ என்ற எண்ணத்தைத் தந்தையார் அன்னையாரிடம் தெரிவித்தார். அன்னையார் இந்த எண்ணத்தை வண்மையாக எதிர்த்தார். சுவாமிகள் வாய் பேச இயலாத நிலையில் படுக்கையிலிருக்கும் நேரத்தில் கம்பெனியை விட்டும் போவது நல்லதல்லவெனக் கண்டித்தார். தாயாரின் இந்த எண்ணத்தைப் பாவலர் அறிந்ததும், “தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் எனக்கும் குருவைப் போன்றவர். அவரையும் நானே சென்னைக்கு அழைத்து வந்து வேண்டிய சிகிச்சைகளைச் செய்கிறேன். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சமாதானம் கூறினார்.

ஒரு நாள் மாலையில் தந்தையார் சென்னைக்குச் சென்றார். எனக்கும் சின்னண்ணாவுக்கும் மட்டும் மாதம் இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம் தருவதாகப் பாவலர் ஒப்புக் கொண்டார். 250 முன் பணமாகவும் கொடுத்தார். பெரியண்ணாவுக்கு அந்தச் சமயம் ‘மகரக் கட்டு’ வந்து சாரீரம் சரியில்லாதலால் அவரை வேடம் புனைய அப்பா அனுமதிக்கவில்லை. அப்போது சென்னையில் பாவலர் கம்பெனியில் பின் பாட்டுப் பாடும் வழக்கம் இல்லை. அதனால் அப்பாவுக்கும் வேலையில்லை. எங்கள் நால்வருக்கும் அப்பாவுமாகச் சேர்த்து 140 ரூபாய்கள் இங்கே சம்பளம். பாவலர் கம்பெனியில் எனக்கும் சின்னண்ணாவுக்குமே 250 சம்பளம்.

நூற்றிப் பத்து ரூபாய்கள் அதிக வரவு; எங்கள் வளர்ச்சியிலுள்ள ஆர்வம் எல்லாமாகச் சேர்ந்து தந்தையார் பாவலர் விரித்த வலையில் விழுந்து விட்டார். ஒருநாள் இரவு சைதாப்