பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


பாடமே நெட்டுருவாகும். அந்தக் காலத்தில் நடிகர்களுக்கு. நாடகம், நடிப்பு, வேடம் இவற்றைப்பற்றியே சிந்தனை. இந்தக் காலத்தில் நடிகர்களுக்கு எத்தனை எத்தனையோ சிந்தனைகள்! என்ன செய்ய முடியும்?

பர்த்ருஹரி

அப்போது சென்னையில் ‘பர்த்ருஹரி’ என்னும் ஒரு மெளனப்படம் ஒடிக்கொண்டிருந்தது. பாவலர் அந்தக் கதையை நாடகமாக நடிக்க விரும்பினார். நாலைந்து இரவுகள் சிரமப்பட்டு நாடகத்தை எழுதி முடித்தார். எல்லோருக்கும் பாடம் கொடுத்தார். எனக்கு விக்ரமன் பாடமும், சின்னண்ணா டி. கே. முத்துசாமிக்கு மோகன பாடமும் கொடுக்கப்பட்டது. நடிப்புப் பயிற்சி யளிப்பதற்குக்கூடப் போதிய நாட்கள் இல்லை. நடிகர்கள் எல்லோரையும் ஒரு நாள் படம்பார்க்க அழைத்துப்போனார். ஏறத்தாழப் படக்கதையை யனுசரித்தே நாடகமும் எழுதப்பட்டிருந்ததால் பாவலர் எங்கள் அருகில் இருந்து படத்தில் நடிப்பவர்களைப் போலவே நடிக்கவேண்டும் என்று கூறினார். நாங்களும் உன்னிப்பாக அந்த ஊமைப் படத்தைப் பார்த்தோம். ஒரே நாள் ஒத்திகை நடந்தது. சதியனுகுயா நடைபெற்ற. ஆறாவது நாள் பர்த்ருஹரி நாடகம் அரங்கேறியது. அப்போது சென்னையில் பர்த்ருஹரி படமும் ஒடிக்கொண்டிருந்ததால் ஊமைப் படத்தைவிட நாடகத்திற்கு அமோகமான வருவாய்’ ஏற்பட்டது. எல்லோரும் பாவலரின் அபாரமான ஆற்றலை வியந்து புகழ்ந்தார்கள்.

தேசீயப் புரட்சி நாடகம்

‘கதரின் வெற்றி’ ஒரு தேசியப்புரட்சி நாடகம். தமிழ்: நாட்டில் முதன் முதலாக நடைபெற்ற தேசீய சமூக நாடகம். அந்த நாடகத்தில் சின்னண்ணாவுக்குக் கதாநாயகி மரகதம்: வேடமும், எனக்கு வக்கீல் வேடமும் கொடுத்தார்கள். சின்னண்ணா கைராட்டையைச் சுற்றிக்கொண்டு பாடும் ஒரு பாடல் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

சீரான இந்தியாவில் பேர்போன
தொழில் களெல்லாம்
செத்துக் கிடக்கும் இந்த
சீர்குலைந்த கானவிலே