பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பதிப்புரை


லைஞர் அவ்வை தி. க. சண்முகம் அவர்களின் எனது நாடக வாழ்க்கை என்னும் இந்நூல், அவரது வாழ்க்கை வரலாறாக இருப்பினும் தமிழ் நாடகக் கலையின் முப்பது ஆண்டுகால வரலாற்று நூலாக விளங்குகிறது.

இந்நூலில் இவரோடு தொடர்பு கொண்ட நாடக ஆசிரியர்கள், நடிக-நடிகையர், கவிஞர்கள், அறிஞர் பெருமக்கள் ஆகியோர் பற்றி இவர் வெளியிடும் செய்திகள் சுவையளிப்பன. அக்கால நாடகமேடை விநோதங்கள், மேடைகளில் நடிகர்கள் மேற்கொண்ட நடிப்பு முறைகள், பார்த்து ரசிக்கும் ரசிகர்களின் விசித்திர இயல்புகள் போன்ற பற்பல செய்திகள் படித்து ரசிக்கத் தக்கவை.

இந்நூலில் கலைஞர், தம் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை மனம் திறந்து சொல்கிறார். அவர் தம் வாழ்வில் சந்தித்த பலரைப்பற்றிப் பாரபட்சமின்றி விமர்சிக்கிறார். இந்நூலைப் படிக்கும் போது காந்தியடிகளின் சத்தியசோதனை நம் நினைவுக்கு வராமல் போகாது.

அவ்வை சண்முகத்தின் அடக்க இயல்பும், அன்புப் பெருக்கும், பிற கனிந்த பண்புகளும்வசீகரம் மிக்கவை. மற்றவர்களுக்குப் போதனை நல்கும் ஒருவர், தம் சொந்த வாழ்க்கையிலும் எத்துணைத் தூய்மையுடைய வராக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டாக விளங்குபவர்.