பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

கம்பெனியில் ‘அதிரூப அமராவதி’ நாடகம் நடத்தி முடித்து விட்டு நாங்கள் எல்லோரும் ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனியின் சதியனுசூயா நாடகம் பார்க்கச்சென்றோம். செவ்வாய், வியாழக் கிழமைகளில் நடைபெறும் நாடகங்களைப் பாவலர் நடிகர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுவார். சில நாட்களில் நாடகம் மிக விரைவில் முடிந்துவிடும். ‘சரச சல்லாப உல்லாச மனேரஞ்சனி’ என்று ஒரு நாடகம் நடந்தது. அதில் நான் மனோரஞ்சனியாக நடித்தேன். நடிகர்களே திட்டமிட்டு நடத்தும் இந்த நாடகங்களுக்குப் பெரும்பாலும் நல்ல வசூலானதில்லை.

நாங்கள் மனோகரா நாடகம் போட்ட அன்று ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலும் மனோகரா நடைபெற்றது. அப்போது அங்கு மனோஹரனாக நடித்தவர் எம். ஜி. தண்டபாணி. அவர் 1920ல் சுவாமிகள் கம்பெனியில் எங்களோடு இருந்தவர். அவருக்கு என்னைவிட நாலைந்துவயது அதிகமிருக்கலாம். ‘வெங்கலத்வனி’ எம். ஜி. தண்டபாணி- பால மனோகரன்’ என்று ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனுயார் விளம்பரம் செய்தார்கள். உடனே பாவலர், யார் பால மனோகரன்? பால மனோகரா சபா எது?” என்ற கேள்வியுடன் ஒரு விளம்பர அறிக்கை விட்டார் அதில், “பால மனோகர சபாவின் நிகரற்ற பால மனோகரன் மாஸ்டர் டி. கே. ஷண்முகம்” எனக் குறிப்பிட்டார். இரு கம்பெனியாருக்கும் விளம்பர அறிக்கைகளிலேயே விவாதம் நடந்தது. மனோகரா போட்டாப் போட்டி நாடகமாக விளங்கியது. மறுவாரம் நடை பெற்ற மனோஹரா நாடகத்தில் பம்மல் சம்பந்தமுதலியார் எனக்கு ஒரு தங்கப்பதக்கம் பரிசளித்தார். இந்து, சுதேசமித்திரன் இரு பத்திரிகைகளிலும் ‘தங்கப் பதக்கம் பரிசளிப்பு’ என்ற தலைப்பில் இச்செய்தி பிரமாதமாக வெளியிடப் பெற்றது. நாங்கள் பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்தோம்.

சுவாமிகளின் நிலை

நாங்கள் சைதாப்பேட்டையிலிருந்து இரவோடிரவாகச் சென்னைக்கு வந்த மறுநாள், செய்தி எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இரண்டு நாட்கள் நாடகம் நடைபெறவில்லை. தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை தள்ளாடியது. பிறகு வேறு யார் யாரையோ எங்களுக்குப் பதிலாக போட்டு நாடகத்தை