பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


தொடர்ந்து நடத்தினார்கள். வசூல் மிகவும் மோசமாகப் போய் விட்டது. கம்பெனியின் நிலையைக் கண்ட மற்றுஞ் சில நடிகர்கள் கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார்கள். உரிமையாளர்களில் ஒருவரான சின்னையாபிள்ளை பணம் கொண்டுவருவதாகச் சொல்லி மதுரைக்குப் போப்விட்டார். பழனியாபிள்ளை எப்படியோ சமாளித்து ஆசிரியர் கே. ஜி. குப்புசாமிநாயுடுவின் உதவியால் கம்பெனியைச் சைதாபேட்டையிலிருந்து பூவிருந்தவல்லிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். பூவிருந்தவல்லியில் நாடகம் நடத்தினார்கள். அங்கும் வசூல் இல்லை. நிலைமை மிகவும் நெருக்கடியாய்விட்டது. அன்றாடச் சாப்பாட்டுக்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். எதிர்பாராத இச் சிரமங்களால் சுவாமிகளின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவரைக் கவனிப்பதிலும் அசிரத்தை ஏற்பட்டது. அவ்வப்போது சுவாமிகளைக் காண வந்த பெரியவர்கள் சிலரிடம் அவர் தமது கைகளால் சாடைகாட்டி, இரண்டு பையன்கள் இருந்தார்கள்; அவர்கள் ஓடிப்போய் விட்டார்கள்; அதனால் வசூல் இல்லை, கஷ்டப்படுகிறேன்” என்று மனம் நொந்ததாக அறிந்தோம்.

அன்னையின் வெற்றி

ஆனைக்கவுணிக்கு வீடு மாறி வத்தபின் குப்புசாமி நாயுடுவின் மனைவியார் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வரத்தொடங்கினார்கள். அவர்கள் மூலம் இச்செய்திகளையெல்லாம் அறிந்தோம். சுவாமிகளின் நிலையைத் தெரிந்ததும் எங்கள் தாயார் மிகவும் வேதனைப்பட்டார்கள். எண்ணத்தை வாய்விட்டுச் சொல்ல முடியாத நிலையில் சுவாமிகளின் மனம் எவ்வளவு வேதனை யடையும் என்பதை எண்ணி யெண்ணி உருகினார்கள். ஒருநாள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதுபற்றிப் பலத்த விவாதம் நடந்தது. பாவலர் கம்பெனியில் நாங்கள் பெரும் புகழுடன் சீரும் சிறப்புமாக இருந்து வருவதை அப்பா எடுத்துக் கூறினார். மீண்டும் பழைய கம்பெனிக்குப் போய்ச் சிரமப்பட வேண்டுமா?’ என்று கேட்டார். அப்பாவின் எந்தச் சமாதானமும் அம்மாவைத் திருப்திப் படுத்தவில்லை. “என் குழந்தை