பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


களுக்குக் குரு சாபம் பிடித்துவிடும், பொருள் புகழ் இல்லாது போனாலும் குழந்தைகளுக்கு எதுவும் நேராதிருக்க வேண்டும். உடனே எப்படியாவது சுவாமிகள் கம்பெனிக்கே போய்விட வேண்டும்’ என்று சொல்லி, அம்மா அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்பாவின் எண்ணமும் மாறியது. தாய்மை யுணர்ச்சி. வெற்றிபெற்றது. நாயுடுவின் மனைவியாரிடம் மீண்டும் கம்பெனிக்கு வந்துவிடுவதாகத் தகவல் சொல்லியனுப்பினார் தந்தையார். குப்புசாமி நாயுடு பெரு முயற்சி செய்து பூவிருந்த வல்லியிலிருந்து கம்பெனியைத் தம் சொந்த ஊராகிய பாண்டிச்சேரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். எங்கள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு கம்பெனியார் காத்திருந்தார்கள்.

அப்பா எங்களையும் அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் போய் வர வேண்டுமென்று பாவலரிடம் விடுமுறை கேட்டார். அத்தோடு சுவாமிகள் மிகவும் அபாயமான நிலையில் இருப்பதால் அவரையும் பார்த்து வரவேண்டுமெனக் கூறினார். கம்பெனியில் புகழும் பொருளும் ஓங்கி உச்ச நிலையடைந்திருக்கும் அந்த நேரத்தில், நாங்கள் போகக் கூடாதென்று பாவலர் கண்டிப்பாக மறுத்துவிட்டார். முன் பணமாகக் கொடுத்த 250 ரூபாய்களைக் கழித்துக் கொள்ளாமலேயே மாதச் சம்பளத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வந்தார். ஜனவரி மாதம் முடிந்தபின் விடுமுறை அளிப்பதாயும் அப்போது ஊருக்குப் போய் வரலாமென்றும், மேலும் பணம் தேவைப்பட்டால் கொடுப்பதாகவும் கூறி விட்டார். அப்பாவின் நிலை தருமசங்கடமாகி விட்டது.

பாவலர் கம்பெனி நடிகர்கள்

பாவலர் கம்பெனியில் அப்போது இருந்த சில முக்கிய நடிகர்களைப்பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கதாநாயகர்கள் இரண்டுபேர் இருந்தார்கள். ஒருவர் ஏ. என். ராஜன், மற்றொருவர் டி. எம். மருதப்பா. இவ்விருவரும் இரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்கள். ஏ. என். ராஜன் அருமையாகப் பாடக் கூடியவர். டி. எம். மருதப்பா திறமையாக நடிக்கக் கூடியவர். பர்த்ருஹரி நாடகத்தில் ஏ. என் ராஜன் பர்த்ருஹரியாக நடிப்பார். மனோகரன் நாடகத்தில் டி. எம்.