பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


மருதப்பா புருஷோத்தமனக நடிப்பார். கதரின் வெற்றி யில் கதாநாயகன் சுந்தரம் வேடத்தை இருவரும் திறம்பட நடிப்பார்கள்.

தருமலிங்கம் என்ற ஒருவர் இருந்தார். அவருக்கு என்னுடைய வயதுதான் இருக்கும். அபிமன்யு சுந்தரியில் சுந்தரி யாகவும், மனோஹரனில் விஜயாளாகவும் அற்புதமாக நடிப்பார். நல்ல இசை ஞானமுடையவர். இனிமையான குரல். அருமையாகப் பாடுவார். சில ஆண்டுகளுக்குப் பின் நாங்கள் சொந்தக் கம்பெனி நடத்திய பொழுது, தருமலிங்கம் எங்கள் கம்பெனியிலும் சில காலம் இருந்திருக்கிறார்.

கொண்டிக் கை சுவாமிநாதன்

சுவாமிநாதன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். அவரை ‘கொண்டிக் கை சுவாமிநாதன்’ என்றுதான் எல்லோரும் குறிப்பிடுவார்கள். அவருடைய கைகளில் ஒன்று கொஞ்சம் ஊனமா யிருந்தது. இவருடைய உடன் பிறந்த தமையனார் திரு பக்கிரி சாமிப் பிள்ளை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில்சிறந்த நகைச் சுவை நடிகராக விளங்கினார். சகோதரர்கள் இருவரில் ஒருவர் பாய்ஸ் கம்பெனியிலும், மற்றொருவர் பாவலர் கம்பெனியிலுமாக இருந்தது, அப்போது எங்களுக்குப் புதுமையாகத் தோன்றியது. நொண்டிக் கை சுவாமிநாதன் மேடைக்கு வந்தவுடனேயே சபையோர் சிரித்து விடுவார்கள். அவர் செய்வதெல்லாம் கொனஷ்டையாகவே இருக்கும். கதரின் வெற்றியில் இன்ஸ் பெக்டராக வந்து அவர் செய்யும் அட்டகாசங்களே இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

ஒரு நாள், கதரின் வெற்றி நீதிமன்றக் காட்சியில் நொண்டிக்கை சுவாமிநாதன் இன்ஸ்பெக்டராக வந்து வாக்கு மூலம் கொடுத்தார். நான் கோடம்பாக்கத்தில் என்று அவர் பேசத் தொடங்கியதும், மூக்கில் சொருகியிருந்க கம்பிமீசை கீழே விழுந்துவிட்டது. வக்கீலாக நின்ற எனக்குச் சிரிப்புத் தாங்க வில்லை, சபையோர் கைதட்டிச் சிரித்தார்கள். அதற்காக அவர் ஒன்றும் பதற்றமடைய வில்லை. இன்ஸ்பெக்டர் எவ்வித பரப் பரப்பும் இல்லாமல் சாவாசமாகக் குனிந்தார். கீழேகிடந்த மீசையை எடுத்தார். கைக்குட்டையால் அதைத் தட்டினார். மீண்டும் மூக்கில் சொருகிக் கொண்டு பேசத் தொடங்கினார்.