பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு வாரத்திற்குப் பின் செங்காங்கடைப் பக்கம் ஏதோ வீடு கிடைத்து விட்டதாகச் சொன்னார். நாங்கள் நாடகத்திற்குப் போனபின் பெரியண்ணா அம்மாவையும் அழைத்துக்கொண்டு புது வீட்டுக்குப் போய்விட வேண்டுமென்றும், தாம் நாடகம் முடிந்து நேரே புது வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் சந்தேகப்படாத முறையில் சொல்லிவிட்டுத் தந்தையார், எங்களையும் அழைத்துக் கொண்டு ராயல் தியேட்டருக்கு வந்தார்.

பாண்டிக்கு ஒடினோம்

1922 அக்டோபர் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை. அன்று ‘அபிமன்யு சுந்தரி’ மாலை நாடகம். சர் சி. பி. இராமசாமி ஜயர் தலைமை தாங்கினார். அவர் அப்போது கவர்னரின் நிருவாக சபையில் முதல் மெம்பராக இருந்தார். சர் சி. பி. நாடகத்தைப் பாராட்டிப் பேசினார். பாவலர், சி. பி. கையால் எனக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசளிக்கச் செய்தார். நாடகம் சிறப்பாக நடந்து முடிந்தது. தந்தையாரின் முன்னேற்பாட்டின்படி பெரியண்ணா அம்மாவுடன் சூளையிலுள்ள கே. ஜி. குப்புசாமி நாயிடுவின் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று விட்டார். நாடகம் முடிந்ததும் நாங்கள் நேராகச் சூளை வீட்டிற்குச் வந்து சேர்ந்தோம். இரவு உணவுக்குப்பின் எல்லோரும் காரில் சைதாப்பேட்டைக்கு வந்து, அங்கிருந்து ரயிலேறி மறுநாள் காலை பாண்டிச்சேரியை அடைந்தோம்.

சுவாமிகளைக் கண்டோம்

மறுநாள் காலை கம்பெனி வீட்டிற்குச் சென்று சுவாமிகளைக் கண்டோம். கீழே விழுந்து வணங்கினோம். சுவாமிகளின் கண்கள் கலங்கின. சிறிது நேரம் அமைதியாக நின்றோம். எங்களுக்கும் அழுகை வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டோம். சுவாமிகள் ஏதேதோ சொல்ல விரும்பினார். வாய் பேச இயலாத நிலையில் அவரது கண்கள்தாம், எண்ணங்களை வெளிப்படுத்தின. நீண்ட நேரத்திற்குப் பின் சுவாமிகள் புன்முறுவல் செய்தார்.