பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120



பாவலர் கம்பெனியிலிருந்து நாங்கள் வந்த பின் அவர் ஏதேதோ முயற்சிகள் செய்தார். எங்கள்மீது குற்றம் சாட்டி நோட்டீஸ் விட்டார். தந்தையாரும் ஒருவக்கீலைக் கலந்து பதில் நோட்டீஸ் கொடுத்தார். சில நாட்கள் இவ்வாறு நோட்டீஸ்களிலேயே வாதம் நடந்தது. கடைசியில் பாவலர் தமது முயற்சியைக் கைவிட்டார்.

சுவாமிகள் மறைவோடு வசூலும் குறைந்து போனதால் சில ஸ்பெஷல் நாடகங்களை நடத்தத் திட்டமிட்டார்கள். பாலாமணி அம்மாள் குழுவினரைக் கொண்டு டம்பாச்சாரி நாடகம் போடச் செய்தார்கள். இக்குழுவினர் அனைவரும் சுவாமிகளிடம் பாசமும் பக்தியும் கொண்டவர்கள்.

அப்போது பாலாமணி அம்மாள் மிகவும் வயதுமுதிர்ந்தவர். அவர்தாம் குழுவின் உரிமையாளர். எனக்கு முதன் முதலாகப் பவுடர் பூசிவிட்ட சி. எஸ். சாமண்ணா ஐயர், குழுவின் மானேஜராக இருந்தார். இந்தக் குழுவில் அதிகமான பெண்கள் இருந்தார்கள். ‘டம்பாச்சாரி’ நாடகம் போடுவதில் இந்தச் சபையார் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தார்கள். பாலாமணி அம்மையார் இளமைப் பருவத்தில் மிகச் சிறந்து விளங்கினராம். கும்பகோணத்தில் பாலாமணி அம்மையார் கதாநாயகியாகவும் பாலாம்பாள் அம்மையார் கதாநாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்திற்கு, ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்ற பெயரால் ஒரு ரயிலே விடப்பட்டதாம், பாலாமணிச் சாந்து, பாலாமணிப் புடவை என்றெல்லாம் வியாபாரிகள் விளம்பரப்படுத்துவார்களாம். இவற்றையெல்லாம் என் தந்தையார் மூலம் அறிந்தேன்.

டம்பாச்சாரி உதவி

பாலாமணி அம்மையாரே டம்பாச்சாரியாக நடித்தார். கதாநாயகி மதனசுந்தரியாக வடிவாம்பாள் நடித்தார். சி. எஸ். சாமண்ணா ஐயர் முதலிலிருந்து முடிவு வரை மொத்தம் பதினொரு வேடங்களில் தோன்றினார். அற்புதமாக நடித்தார். அவரை ‘இந்தியன் சார்லி சாப்ளின்’ என்றே அக்காலத்தில் குறிப்பிட்டார்கள். இந்தப் பட்டம் அப்போது சென்னை கவர்னராக இருந்த லார்டு வெல்லிங்டன் அவர்களால் இவருக்கு வழங்கப்