பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முத்துச்சாமிக் கவிராயர்

திருவண்ணமலையில் நாடகங்கள் தொடர்ந்து நடை பெற்றன. மாமாவும் சிற்றப்பாவும் எங்களோடு தனி வீட்டில் தங்கினார்கள். அவர்கள் இருவருக்கும் வேலை கொடுத்து, ஆளுக்கு இருபத்தைந்து ரூபாய்கள் வீதம் சம்பளம் கொடுக்கப் பெற்றது. எங்களுக்குக் கொடுத்து வந்த இருநூற்றி இருபத்தி ஐந்து ரூபாய் சம்பளம், அப்பா காலமானதால் நூற்று எழுபத்தைந்தாகக் குறைந்தது.

சில நாட்களில் உடுமலை சந்தச் சரபம் முத்துசாமிக் கவிராயர் எங்கள் கம்பெனிக்கு நாடகாசிரியராக வந்து சேர்ந்தார். இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் நன்கு பயின்றவர். மூன்றிலும் கவிபுனையும் ஆற்றல் பெற்றவர். எல்லோரிடமும் இனிய முறையில் பழகக் கூடியவர். சாதுரியமாகப் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் தன்மை வாய்ந்தவர். வேடிக்கை கதைகள் சொல்லுவதில் கவிராயர் நிபுணர். எப்போதும் கம்பெனிப் பிள்ளைகளைக் கூட்டி வைத்து ஏதாவது கதைகள் சொல்லிக் கொண்டேயிருப்பார். பாடத்தைவிடக் கதைகளைத்தான் நாங்கள் அதிக ஆர்வத்துடன் கேட்போம். பாடம் சொல்லிக் கொடுக்கும் நேரங்களில் கூட அதை மறந்து விட்டு, கதைகள் சொல்லும்படி நாங்கள் வற்புறுத்துவோம். அவரும் சளைக்காமல் அன்போடு சொல்லுவார். சங்கரதாஸ் சுவாமிகளைவிட வயதில் மூத்தவர். வாயில் ஒரு பல் கூட இல்லை. பொக்கை வாய்க் கிழவராகக் காட்சி அளித்தார். மதுரைவீரன், மன்மத தகனம் ஆகிய இரு நாடகங்களையும் அவர் எழுதிக் கொடுத்தார். மதுரை வீரனில் எனக்கு, ‘சக்கிலிச்சி’ பாடம் கொடுக்கப்பெற்றது. சின்னண்ணாவுக்குப் ‘பொம்மி’ பாடமும் ‘பிரதி’ பாடமும் தரப் பெற்றன. மதுரை வீரன் நாடகத்தில்