பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132


காகிதங்களில் நாலைந்து நாடகங்களின் பெயர்களை எழுதிப் போடுவார். அவற்றில் முதலாவதாக எந்தக் காகிதத்தில் “ஈ” வந்து உட்காருகிறதோ, அதைப் பிரித்துப் பார்த்து அந்த நாடகத்தையே போட ஏற்பாடு செய்வார். இவருடைய செயலைப் பார்த்து நாங்கள் இவருக்கு ‘ஈ ஜோசியர்’ என்று பெயர் வைத்தோம். எந்த ஜோசியமும் பலிக்கவில்லை. வசூல் வர வரக் குறைந்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் ஆவுடையப்ப முதலியாருக்குச் சொந்தமாகக் கம்பெனி நடத்த வேண்டுமென்ற ஆசையும் ஏற்பட்டது. வசூல் இல்லாத அந்த நிலையிலும்கூட எனக்கு அவர் அவ்வப்போது ஐந்து ரூபாய்கள் பரிசளித்து வந்தார். சின்னையாபிள்ளைக்கும் தேவைபோல் பணம் கொடுத்தார். கடைசியாக, காண்ட்ராக்ட் முடியும் சமயத்தில் கம்பெனியார் காண்ட்ராக்டருக்குப் பணம் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை நேரிட்டது. ஆவுடையப்ப முதலியார் தம் பணத்திற்குத் தொந்தரவு கொடுக்கவே, சின்னையாபிள்ளை முழுத் தொகைக்கும் நோட்டு எழுதிக் கொடுத்து விட்டுக் கூடலூருக்குக் கம்பெனியைக் கொண்டு சென்றார்.

கருப்பையாபிள்ளை சொந்தக் கம்பெனி

கூடலூரில் நாடகம் நடந்தது. வசூல் மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் முதலாளி கருப்பையாபிள்ளை, சின்னையா பிள்ளையுடன் வேற்றுமைப் பட்டு கம்பெனியை விட்டு விலகிக் கொண்டார். திருப்பாதிரிப்புலியூரில் உடனடியாகச் சொந்தக் கம்பெனி துவக்க ஏற்பாடுகள் செய்தார். காமேஸ்வர ஐயர் மட்டும் அவரோடு போகாமல் எங்கள் கம்பெனியிலேயே இருந்து வந்தார்.

கூடலூரில் கொட்டகைக்குரிய வாடகை சரியாகக் கொடுக்கப் படவில்லை, அதற்காகக் கொட்டகைக்காரர் ஒரு ஆளை டிக்கெட் விற்கும் அறையிலேயே இருக்கச் செய்து வசூல் பணத்தை எடுத்துவர ஏற்பாடு செய்தார். அந்த ஆள் பலே பேர்வழி. அந்த நாளில் கொட்டகைக்காரருக்கு ஒவ்வொரு நாடகத்திற்கும் இலவச அனுமதிச் சீட்டுகள் ஏராளமாகக் கொடுப்பதுண்டு. அந்த இலவச டிக்கெட்டுக்களையெல்லாம் இந்த ஆள் விற்றுச் சொந்தத்