பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


கம்பெனியில் இருந்தவர். அங்கே அவருக்குப் பாடமாகியிருந்த ஜே. ஆர். ரங்கராஜூ அவர்களின் இராஜாம்பாளை எங்களுக்குப் பயிற்றுவித்தார். இராஜாம்பாள் நாடகத்திற்கு அனுமதி சுலபத்தில் கிடைக்கவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு மாமா நேரில் சென்னைக்குப்போய் ரங்கராஜுவிடம் அனுமதி வாங்கி வந்தார். ரங்கராஜுவின் சட்ட திட்டங்கள் நிரப்பவும் கெடுபிடியானவை. அவரது நாவல்களை யாரும் எளிதில் நாடகமாக நடித்துவிட இயலாது. அவற்றையெல்லாம் பின்னால் விவரமாகச்சொல்லுகிறேன். மாமா அனுமதிபெற்று வந்ததும் கடைசிநாடகமாக “இராஜாம்பாள்” நடித்துவிட்டு எல்லோரும் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தோம்.

ஆரிய கான சபை

தஞ்சாவூர் வந்த அன்று, நாங்கள் நடிக்கவிருந்த கொட்டகையில் ஆரிய காண சபையின் கடைசிநாடகம் சதி சுலோசன நடைபெற்றது. நாங்கள் வழக்கமாக நடித்துவரும் நாடகமாதலால் எல்லோரும் இரவு அந்நாடகத்திற்குப் போயிருந்தோம்.

மன்னார்குடி எம் ஜி. நடராஜபிள்ளை இந்திரஜித்துவாகவும் கே. எஸ். அனந்தநாராயணகய்யர் சுலோசனையாகவும் நடித்தார்கள். இவர்கள் இருவரும் நடித்த அந்த நாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. இருவரும் அருமையாகப் பேசினார்கள். அனந்த நாராயணய்யரின் தளுக்கும், குலுக்கும், ஒரு பெண்ணைப் போலவே குழைந்து குழைந்துபேசும் அழகும், இசைத்திறமையும் மறக்க முடியாதவையாக இருந்தன. இடையிடையே இவர்கள் சொந்தமாகப் பேசிக்கொண்ட சில உரையாடல்களைத் தவிர, எல்லாம் நாங்கள் நடிக்கும் சுவாமிகளின் பாடம்தான், எனவே, நாடகம் எங்களுக்கு மிகவும் சுவையாக இருந்தது. சுவாமிகளின் கம்பெனி நடிகர்கள் என்றறிந்ததும் அனந்தநாராயணய்யரும் நடராஜபிள்ளையும் எங்களை அன்புடன் வரவேற்றார்கள்.

சங்கீதக் காவலன்

மறுநாள் தஞ்சை காமாட்சியம்பாள் நாடகக் கொட்டகையில் நாடகம் தொடங்கியது. எஸ். என். இராமையாவின் பாட்டுக்குப் பிரமாதமான பேர். கோவலன் நாடகத்தில்