பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140


ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சாய்மான நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டும், சில நேரங்களில் படுத்துக் கொண்டுதான் செட்டிப் பிள்ளைகள் நாடகம் பார்ப்பார்கள். அந்த நாளில் மற்ற ஊர்களில் முதல் வகுப்பு ரூ. 1- 8.0 போடுவது வழக்கம். காரைக் குடியில் மட்டும் முதல்வகுப்பு ரூ. 2- 8.0 போடப்பட்டிருப்பதைப் .பார்த்து நாங்கள் வியப்படைந்தோம். சபையில் நான்கில் ஒரு பகுதியை நீளமாகத் தனியே தடுத்து அந்த இடம் பெண்களுக்காக ஒதுக்கப் பெற்றிருந்தது. முன்னால் சிறிது தூரம்வரை பாய் விரித்திருக்கும். அதற்கு எட்டணா கட்டணம். வெறும் தரையில் உட்காருவதற்கு ஆறணு கட்டணம். இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், பெண்கள் யாரும் முதல் வகுப்புச் சாய்மான நாற்காலிகளில் உட்காரக் கூடாது. ஆண்களோடு பெண்களும் சரிசமானமாக இருக்கக் கூடாது என்பது அவர்கள் எண்ணம். இதை யாரும் எதிர்க்காததால் நடைமுறையில் இந்த விதி ஒழுங்காகச் செயல் பட்டு வந்தது.

ஆண் பெண்ணாண அதிசயம்

டி.பி. இராஜலட்சுமியின் நாடகத்தைப் பார்த்து நானும் சின்னண்ணாவும் பிரமாதமாக ரசித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் சிற்றப்பாவோடு சாய்மான நாற்காலியில் அமர்ந்திருந்தோம், சிண்னண்ணாவுக்கு அப்போது பதினைந்து வயது. அழகிய தோற்றம்; நீளமான தலை முடி; பெண் போலவே இருப்பார். கைகளில் காப்பு, கொலுசு, சிறு தங்க வளையல்கள் எல்லாம் போட்டிருந்தார். காதில் ஐந்து கல் பதித்த கடுக்கனும் இருந்தது. எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு செட்டியார், சின்னண்ணாவை முறைத்து முறைத்துப் பார்த்தார். யாரோ ஒரு பெண்தான் வேட்டி, சட்டை போட்டுக்கொண்டு வந்திருப்பதாக எண்ணிக்கொண்டார். அவர் நன்றாகக் குடித்திருந்தார். அந்தப் போதையும் இப்படி எண்ணாவதற்குத் துணை செய்தது. அவரால் சும்மா இருக்க முடியவில்லை. பக்கத்திலிருந்த மற்றொரு செட்டியாரிடம் சின்னண்ணாவைக் காட்டிப் புகார் செய்தார். அந்தச் செட்டியார், நாங்கள் மறுநாள் நாடகம் போடப் போவதை அறிந்தவர். எனவே அவர், “அது பையன்தான்,