பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142


கேட்டுக் கொண்டார். அன்றைய நாடகத்திற்கு ஆன வசூலி லிருந்து 125 ரூபாய்கள் கொப்புடையம்மன் கோயிலுக்கு அபராதக் காணிக்கையாகச் செலுத்தவேண்டும் என்றார்கள் சில பெரியவர்கள். சின்னையாபிள்ளை அவ்வாறே அபராதம் செலுத்தினார். அப்புறம் நாடகம் தொடர்ந்து நடைபெற்றது. மறுநாள் முதல் - மூன்றரை ரூபாய் கட்டணத்தோடு முதலாளிதிருப்தி அடைந்தார்.

ஐநூறு ரூபாய் சம்பளம்

காரைக்குடியில் வருவாய் அதிகமாக ஏற்பட்டதும் சின்னையாபிள்ளையின் சுபாவத்திலும்பெரிய மாறுதல் ஏற்பட்டது. பெரியண்ணாவுக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறுகள் நேர்ந்தன. தான் போட்ட பணமெல்லாம் புதுகோட்டை, காரைக்குடியிலேயே வந்து விட்டதாகவும், இனி யாருக்கும் பயப்படப் போவதில்லையென்றும் ஆத்திரத்தோடு பேசியதாகப் பழனியா பிள்ளை கூறினார். அம்மாவின் செவிக்கு இந்தச்செய்தி எட்டியதும் அவர்கள், உடனே நாங்கள் அங்கிருந்து விலகி, வேறு கம்பெனிக்குப் போகவேண்டுமென்று முடிவுசெய்தார்கள். இதைக்கேள்விப் பட்டதும் சின்னையாபிள்ளை மீண்டும் வந்து, தான் ஒன்றும் சொல்லவில்லையென்று சாதித்தார். நீண்ட நேரம் வாத பிரதி வாதங்கள் நடந்தன. கடைசியாக இனிமேல் கம்பெனியில் இருக்க வேண்டுமானுல் எனக்கும் சின்னண்ணாவுக்கும் ஐநூறு ரூபாய் சம்பளமும், ஆயிரம் ரூபாய் முன்பணமும் கொடுக்க வேண்டுமென்று பெரியண்ணா கேட்டார். வேறு வழியின்றி இந்தச் சம்பளத்திற்குச் சம்மதித்து முன்பணமாக ஐநூறு ரூபாய் கொடுத்தார் சின்னையாபிள்ளை.

நாங்கள் கேட்டபடி ஐநூறு ரூபாய் சம்பளம் கொடுத்தும் சின்னையாபிள்ளையிடம் பெரியண்ணாவுக்கு நம்பிக்கை ஏற்பட வில்லை. கூடலூரில் அவர் தற்கொலை செய்து கொள்ளச் சித்தமாயிருந்த நிலையையெல்லாம் மறந்து விட்டார்; ஆதலால் எந்த நிமிஷத்திலும் கம்பெனியை விட்டு நிறுத்திவிடக் கூடும் என்றெண்ணினார் அண்ணா. காரைக்குடி நாடகம்முடிந்ததும் மீண்டும் புதுக்கோட்டையில் சில நாடகங்கள் நடத்தி விட்டு மதுரைக்குப் பயணமானோம்.