பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

சங்கிலியறுக்கும் காட்சியை அந்த அரங்கிலே நடிக்கச் சொன்னார் அரசர். எனக்கு என்னவோபோலிருந்தது. பகல்வேளை, உடைகள் இல்லை; ஒப்பனை இல்லை; சங்கிலியில்லை. இரண்டுபேர். மேல் துண்டை என் கைகளிலே கட்டியிழுத்துப் பிடித்துக் கொண்டார்கள். நான் எப்படியோ ஒரு வகையாக நடித்தேன். அரசர், தம் பேரரின் கையிலே போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றி என் கையிலே போட்டார். அவரது போற்றத் தகுந்த அந்தக் கலையுணர்ச்சி, அன்று எனக்குப் புரியவில்லை. இன்று அதன் சிறப்பினை எண்ணிப் பெருமகிழ்ச்சியடைகிறேன். அன்றைய மறு நாள் காசி மகாராஜா அரண்மனையிலுள்ள நாடக அரங்கில் மனோஹரன் நாடகம் நடந்தது. அன்று தாத்தா மகாராஜா வரவில்லை. மற்றவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். மற்றும் பல பரிசுகள் வழங்கப் பெற்றன. சின்னண்ணாவுக்கு அந்தப்புரப் பெண்கள் ஒரு புடவையைப் பரிசாக அனுப்பினார்கள்.