பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149


எட்டையபுர அரசரின் அழைப்பு எங்களுக்கு எல்லா வகை யிலும் சிறப்பாக அமைந்தது. மற்றும் சில நாடகங்களை நடித்து விட்டு மதுரைக்குத் திரும்பினோம்.

தீ விபத்து

மதுரையில் நாடகம் முடிந்ததும் இராமநாதபுரத்தில் - நாடகம் தொடங்குவதாக ஏற்பாடு. இராமநாதபுரத்தில் அப்போது கொட்டகையில்லாததால் சொந்தத்தில் கீற்றுக் கொட்டகை போட்டார்கள். எட்டையபுரம் நாடகம் முடிந்ததும் இராமநாதபுரம் போவதாக இருந்ததால், கம்பெனியின் காட்சிச் சாமான்களும் இராமநாதபுரத்திற்கு அனுப்பப்பட்டன. நாங்கள் மதுரைக்குத் திரும்பியதும் திடுக்கிடத்தக்க செய்தி கிடைத்தது. இராமநாதபுரம் கொட்டகையும் அதிலிருந்த சாமான்களும் யாரோ வைத்த தீயால் எரிந்து சாம்பலாகி விட்டதாக அறிந்தோம். சின்னையாபிள்ளை அலறியடித்துக் கொண்டு இராமநாதபுரத்திற்கு ஓடினார்.

எட்டையபுரம் நாடகத்திற்காக உடைகளைக் கையோடு வைத்திருந்ததால் அவை மட்டும் விபத்துக்கு இரையாகாமல் தப்பின. இராமநாதபுரம் சென்றிருந்த சின்னையாபிள்ளை துயரத்தோடு திரும்பினார். அப்போது; பிரபல ஓவியர் கொண்டையராஜு கம்பெனியில் இருந்தார். அவரைக் கொண்டு புதிய சாமான்கள் எழுதத் திட்டம் போட்டார்கள். மதுரையிலேயே மேலும் சில நாடகங்கள் நடத்திவிட்டுத் திருநெல்வேலிக்குப் பயணமானோம்

பழனியாபிள்ளை விலகினார்

திருநெல்வேலி மனோரமா தியேட்டரில் நாடகங்கள் நல்ல வசூலுடன் நடைபெற்றன. ஒவியர் கொண்டையராஜு புதிதாகச் சாமான்கள் எழுதத் தொடங்கினார். இந்த நிலையில் பழனியா பிள்ளைக்கும் சின்னையாபிள்ளைக்கும் மன வேற்றுமை ஏற்பட்டது. ஆதிமுதலே உண்மையாக உழைத்து வந்தவர் பழனியாபிள்ளை. அவர் பணம் எதுவும் போடாதவர். உழைப்புப் பங்காளி. புதுக் கோட்டை, காரைக்குடி, மதுரை ஆகிய இடங்களில் வசூல்