பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாஞ்சில் நாட்டில்

நாகர்கோவிலில் எங்களுக்கு உறவினார்கள் பலர் இருந்தார்கள். நான், எனக்கு அறிவு தெரிந்த பருவம் முதல் மதுரையில் இருந்து வந்ததால் உறவினார்கள் எவரையுமே சந்தித்ததில்லை. நாகர்கோவிலில்தான் முதன்முதலாக அந்த வாய்ப்பு ஏற்பட்டது. தந்தை வழியில் சொந்தக்காரர்களான பலரை அம்மா எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அம்மாவின் உடன் பிறந்த தங்கை, அம்முக்குட்டியம்மாள் நாகர்கோவிலுக்குப் பத்து மைல் தொலைவிலுள்ள அழகிய பாண்டியபுரத்தில் வாழ்க்கைப்பட்டிருந்தார். சின்னஞ்சிறு வயதில், சில காலம் நானும் அழகிய பாண்டியபுரத்தில் சித்தி வீட்டில் இருந்திருக்கிறேன். சித்தியைப் பார்த்ததும் சின்னஞ்சிறு பருவத்தில் நடந்த நிகழ்ச்சிகள் என் நினைவுக்கு வந்தன.

சின்னஞ்சிறு வயதில்

அப்போது எனக்கு நான்கு வயது இருக்கும். அழகிய பாண்டியபுரத்தில் சித்தி வீட்டில் இருந்தேன். நான் எப்போது போனாலும் சித்தி எனக்கு அவல் விரவிக்கொடுப்பார்கள். நாஞ்சில் நாட்டுச் சம்பா அவல் மிகுந்த சுவையாக இருக்கும். அவலை உரலில் போட்டு இடித்து, வெல்லச்சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலம், சுக்கு இவை எல்லாம் போட்டு விரவித் தருவார்கள். ஒரு நாள் யாரோ நண்பர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். சித்தி இரும்பால் செய்யப்பட்ட அரைப்படி நாழியை எடுத்துக் கொண்டு, வீட்டின் எதிரேயுள்ள கடையில் அவல் வாங்கப் புறப்பட்டார்கள். உடனே நான் நாழியை அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு, அவல் வாங்கக் கடைக்கு ஓடினேன். அவலை வாங்கிக் கொண்டு மீண்டும் வேகமாக வீட்டுக்குத் திரும்பினேன். ஏதோ கல் தடுக்கியது; கால் இடறி நாழியோடு கீழே குப்புற விழுந்தேன். விழுந்த வேகத்தில் நாழியின் கூரான விளிம்பு, என்