பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152


நாடியின் வலப்புறத்தில் தாக்கியது. ஆழமான காயம், ரத்தம் கொட்டியது. சித்தி ஓடி வந்து, என்னை மார்போடு அணைத்துக் கொண்டார்கள். உடனடி சிகிச்சை செய்யப் பெற்றது. காகிதங் கள் சிலவற்றைக் கொளுத்தி, அந்தக்கரியைத் தேங்காயெண்ணெ யில் குழப்பிக் காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள். ரத்தம் வருவது நின்றது. இரண்டொரு நாட்களில் காயமும் ஆறிவிட்டது. வேறு எந்த மருந்தும் போட்டதாக எனக்கு நினைவில்லை. 56 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், அந்தக் காயத்தின் வடுமட்டும் சித்தி வீட்டின் நினைவாக இன்னும் மாறாமல் இருக்கிறது. சித்தியிடத்தில் அம்மா அதிகமான அன்பு வைத்திருந்தார். வறுமையாயிருந்த நிலையில்கூடச் சித்திக்குப் பல வகைகளில் உதவிபுரிந்து வந்தார்.

பகவதி பிறந்த ஊர்

நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகும் வழியில் மூன்றாவது மைலில், ஆசிராமம் என்ற ஒரு சிற்றுார். அந்த ஊரில் தந்தையார் குடும்பத்தோடு சில காலம் வசித்து வந்தார். ஆசிராமத்தில் தம்பி பகவதி பிறந்தான். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஏடு படித்துக் கொண்டிருந்தேன். எங்களைத் தனியே விட்டு அப்பா அடிக்கடி நாடகத்திற்காக வெளியூர்களுக்குப் போவார். ஒருமுறை தாமரைக்குளம் என்னும் அருகேயுள்ள சிற்றுாரில் அப்பா நல்லதங்காள் வேடம் பூண்டு நடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நான் ஏழாவது பிள்ளையாக நடித்ததை முன்பே கூறியிருக்கிறேன். ஏதோ கனவுபோல் இருக்கிறது. அப்பா ஆறு பிள்ளைகளையும் கிணற்றில் போட்டுவிட்டு என்னைத் தூக்க வந்தார். நான் அழத் தொடங்கிவிட்டேன். அவர் பிடிக்கு அகப்படாமல் உள்ளே ஒடினேன். அப்பா என்னைத் துரத்திப் பிடித்துக் கிணற்றில் போட்டதாக நினைவு.

சுட்டித்தனம்

ஒருநாள் வீட்டின் வெளியே நடுத்தெருவில் விளையாடிக் கொண்டிருந்தேன். கன்னியாகுமரிக்குப் போகும் முக்கியமான சாலை அது. அந்தக் காலத்தில் போக்கு வரத்து அதிகம் இல்லை.