பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153


என்றாலும், மணிக்கொரு வண்டியாவது போய்க்கொண்டுதான் இருக்கும். யாரோ ஒருவர் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரைத் தடுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. சைக்கிளை வழிமறித்து நின்றேன். அவர் மற்றொரு புறமாக விலகிச் சென்றார். நானும் விடவில்லை. அந்தப் பக்கமும் ஒடி வழிமறித்தேன். என்னைத் தாண்டிச் செல்ல அவர் சைக்கிளை இருபுறமும் திருப்பி ஒட்டினார். அதுவும் பலிக்கவில்லை. நான் வீரனல்லவா? விடுவேனா? குறுக்கே விழுந்து தடுத்தேன். அவர் வேகமாகப் போக முயன்றதால் சைக்கிள் என்மீது பலமாக மோதியது. நானும் அவரும் கீழே விழுந்ததோடு, சைக்கிளும் விழுந்தது. வீதியில் ஒரே குழப்பம். அப்பா ஓடி வந்து, என்னையெடுத்து அணைத்துக் கொண்டார். சைக்கிள்காரருக்கு நல்ல பூசையும் விழுந்தது. அவரைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது. பாவம், அவர் என்னசெய்வார்? நானல்லவா குற்றவாளி! நாகர் கோவிலில், இந்தப்பழைய நினைவுகளெல்லாம் எனக்கு இன்பமாக இருந்தன.

பகவதி பால பார்ட்டு

நாடகங்கள் ஒழுகினசேரி சரஸ்வதி தியேட்டரில் நடை பெற்றன. நல்ல வசூலும் ஆயிற்று. அந்த நாளில் ‘பாலபார்ட்டு’ என்று ஒரு வேடம் உண்டு. மூன்று அல்லது ஐந்து பேர், திரை தூக்கியவுடன் மேடைமீது நின்று தோத்திரப் பாடல்களைப்பாடுவார்கள். அவர்கள் சில பாடல்களைப் பாடிவிட்டு, உள்ளே வந்ததும் ‘பபூன்’ போவார். அவரும் சில பாடல்களைப் பாடுவார். அதன் பிறகுதான் நாடகக் காட்சி தொடங்கும். இந்தப் பால பார்ட்டுகளில் ஒருவகைத் தம்பி பகவதியும் நாகர்கோவிலில் அரங்கேறினன். நடிகர்கள் கூட்டமாகப்பாடப் பயிற்சி பெறுவதற்கு இந்த பால பார்ட்டு மிகவும் உபயோகப்பட்டது. தாளம் சரியாக வராதவர்களையெல்லாம் பால பார்ட்டில் ஒரு மாத காலம் போட்டு வைத்தால், கூட்டத்தோடு பாடி அவர்களுக்குத் தாளம் வந்துவிடும். பகவதியும் இவ்வாறு பயிற்சி பெறத் தொடங்கினன். நாகர்கோவில் நாடகம் முடிந்து, திருவனந்தபுரம் போகலாமென்று சிற்றப்பா, மாமா ஆகியோர் கருத்துத் தெரிவித்தார்கள். திருவனந்தபுரம் எங்களுடைய சொந்த