பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஸ்ரீ பால ஷண் முகானந்த சபா

திருவனந்தபுரம் ஆரிய சாலைத் தியேட்டரில், உள்ளேயே சில வீடுகள் இருந்தன. அங்கே வந்து தங்கி, சொந்தக் கம்பெனி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்தோம். மாமா செல்லம்பிள்ளை பல இடங்களுக்குப் போய், புதிய பையன்களைக் கொண்டு வந்து சேர்ந்தார். எஸ். எஸ். சங்கரன் நன்றாகப் பாடக் கூடியவர். அவரைத் திருநெல்வேலியிலிருந்து அழைத்து வந்தார்கள். அவருக்குக் கோவலன் பாடம் கொடுக்கப்பெற்றது. கம்பெனிக்கு, ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா எனப் பெயர் சூட்டப் பெற்றது. திருவனந்தபுரத்தில்தான் கம்பெனியைத் துவக்கினோம். என்றோலும், மதுரை நகரத்தின்பால் எங்களுக்கு ஏற்பட்டிருந்த பற்றுதலினல் ‘மதுரை ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா’ என்றே பெயர் வைத்தோம். நாடகங்கள் வேகமாய்த் தயாராயின.

விளையும் பயிர் முளையிலே

மாமா நாகர்கோவிலிலிருந்து நாலைந்து பையன்களைக்கூட்டி வந்திருந்தார். அவர்களில் ஒருவருடைய சாரீரம், மகரக் கட்டு வந்து, தேறிய சாரீரம் போல் கனமாகவும் கம்பீரமாகவும் இருந்தது. புதிய பையன்களுக்குப் பாட்டுகளைச் சொல்லி வைக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பெற்றது. புதிதாக வந்த நான்கு பேரையும் உட்கார வைத்து நான், ‘மூல மந்திர மோன நற்பொருளே’ என்னும் சுவாமிகளின் பாடலைச் சொல்லிக் கொடுத்தேன். ஐந்தாறு முறை சொல்லிக் கொடுத்து விட்டுத். தண்ணிர் குடிக்கச் சென்றேன். மீண்டும் மாடிக்கு வரும்போது, புதிதாக வந்தவர்களில் கனமான சாரீரமுடையவர், மற்ற மூன்று பேருக்கும் அந்தப் பாடலைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு ஒரே வியப்பாக இருந்தது. “இந்தப் பாட்டு உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று அவரைக் கேட்டேன்.