பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162


அடிக்கடி விசாரித்துக் கொண்டே நின்றேன். சுந்தரி, அபிமன்யுவுக்கு ஒலை எழுதியனுப்பும் காட்சியும் முடிந்தது. அடுத்து அபிமன்யு வரவேண்டிய காட்சி. நான் வேட்டைப் பாட்டுப் பாடியபடி மேடைக்கு வந்தேன். அவ்வளவுதான்.

வாயிலில் குழப்பம்

வெளியே வாயிலில் ஏதோ குழப்பம் நடப்பது நன்றாகத் தெரிந்தது. டிக்கட் விற்குமிடத்திலும் ஒரு கூட்டம் பாய்ந்தது. அடி, குத்து, வெட்டு என்றெல்லாம் பெருஞ் சத்தம் கேட்டது. பலத்த அடிதடி நடப்பதை மேடையிலிருந்தே பார்த்தேன் . எனக்குக் குலை நடுக்கம் எடுத்தது. இதில் பெரிய ஆச்சரியம் என்ன வென்றால், உள்ளேயிருந்த சபையோர் அப்படியொரு கலவரம் நடப்பதாகவே கருதியதாகத் தெரியவில்லை. அமைதியாக நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எவரும் இந்தக் குழப்பத்தைப்பற்றிச் சட்டை செய்யவில்லை. ஆணகள்தான் அப்படியென்றால் பெண்களும் வீராங்கனைகளாக இருந்தார்கள். யாரும் எழுந்திருக்கவில்லை. கலவரத்தைக் கவனிக்கவுமில்லை. எதுவும் நடவாததுபோல் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு இது புதிய அனுபவமாயிருந்தது. கூச்சலும், குழப்பமும் அதிகரித்தது. கலவரம் உச்சநிலையடைந்தது, முன் திரை விடப்பெற்றது. நான் அச்சத்தோடு பின்புறம் நின்று கொண்டிருந்தேன். ஆர்மோனியம் கிருஷ்ணமூர்த்திஐயர் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆர்மோனியம், மிருதங்கம் எல்லாம் அரங்கின் வலதுபுறத்தில்தான் இருக்கும். முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு ரசிகர்க்கு, நாடகத்தை நிறுத்தியது பிடிக்கவில்லை போலிருக்கிறது. நாடகத்தைத் தொடர்ந்து நடத்தும்படி சத்தம் போட்டார். அத்தோடு நிற்கவில்லை. தான் உட்கார்ந்திருந்த நாற்காலியைத் தூக்கி, ஆர்மோனியக்காரரின் மேல் வீசினார். நல்ல வேளையாக நாற்காலி அவர்மேல் விழவில்லை. முன் வீதித் திரையைக் கிழித்துக் கொண்டு, உள்ளே நின்ற என் காலடியில் வந்து வீழ்ந்தது.

அரங்கிற்குள் ஆர்ப்பாட்டம்

இந்தச் சமயத்தில் பெருங்கூச்சலுடன் மேடைக்குள் ஒரு கூட்டம் நுழைந்தது. “இதோ இருக்கிருண்டா” என்றது ஒரு