பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163


குரல். அடுத்த வினாடி யாருக்கோ பலமான- அடி விழுந்தது. ஐம்பது அறுபது பேர் தாக்கினார்கள் ஒருவரை. அடிப்பட்டவர் “நானில்லே, நானில்லே’ என்று கதறினார். அந்தக்குரல் எங்கள் சமையல் மாதவன் நாயருடைய குரல். நாங்கள் பதறினோம்; சிறுவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கி ஒருபுறமாக நின்றோம். வந்தவர்களில் ஒருவர், “டே, பையன்களை யாரும் ஒண்ணாம் செய்யாதீங்கடா” என்று தெய்வம்போல் குரல் கொடுத்தார். இதற்குள் சமையல் மாதவன் நாயரை உற்றுப் பார்த்த ஒருவர் “அடே, இவனில்லேடா, குத்தினவன் வேறு ஆளு. வாங்க வெளியே போய்ப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். அனைவரும் அவரைப்பின் தொடர்ந்தார்கள்.

சில நிமிடங்களில் கொட்டகையின் பின்புறமிருந்த மூங்கிற் பாயைக் கிழித்துக் கொண்டு ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. அவர் எங்கள் சிற்றப்பா. கலவரக்காரர்கள் அவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அவரைப் போய் விடுமாறு வேண்டிக்கொண்டோம். அவர், தான் அருகிலேயே இருப்பதாகவும், பயப்படாதிருக்குமாறும் கூறிவிட்டுமறைந்தார். இதற்குள் நாடகத்தை நடத்துமாறு சபையோர் சத்தம் போட்டார்கள். இத்தனைக்குழப்பத்திலும் நாடகம் பார்க்க வந்தவர்களில் யாரும் கலவரம் அடையவில்லை. இதுபோன்ற கலவரங்கள் பலவற்றை அவர்கள் அடிக்கடி பார்த்து பழகிவிட்டதுதான் காரணமென்று பின்னால் தெரிந்தது. நாடகம் தொடர்ந்து நடை பெற்று முடிந்தது. கம்பெனி வீடு அருகிலேயே இருந்தது. என்றாலும் எங்களுக்கு வெளியே போகப் பயமாகவே இருந்தது. பெரியவர்கள் சிலர் தைரியமாக நின்று அழைத்துச் சென்றார்கள். மறு நாள் பொழுது புலர்ந்த பிறகு, சிற்றப்பாவின் மூலம் நடந்த விபரங்கள் தெரிய வந்தன.

கண்டகோடரியும் கத்தி வீச்சும்

மானேஜர் ஐயரிடம் பயமுறுத்தி விட்டுப் போன ரெளடிகள் இரவு நன்றாகக் குடித்துவிட்டு, ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். சிற்றப்பாவும் மற்றொருவரும் வெளிவாயிலில் அவர்களைத் தடுத்திருக்கிறார்கள். சிற்றப்பாவுடனிருந்த மற்றொருவர், தாம் வைத்திருந்த கண்டகோடரியால் ஒருவரைத்