பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165


கழுத்திலிருந்த கெம்பு அட்டிகையைக் கழற்றிச் சின்னண்ணா கழுத்தில் போட்டார். இவற்றையெல்லாம்விட அவர் செய்த மற்றொரு செயல் எங்களைப் பிரமிக்க வைத்தது. ஒருநாள் மனோஹரா நாடகத்தின் போது சின்னண்ணா உடுத்தியிருந்த புடவை அவருடைய மனத்திற்குத் திருப்தியளிக்கவில்லை. வசந்த சேனை இம்மாதிரிப் புடவையையா உடுத்திக் கொள்வது என அவருக்குத் தோன்றியது போலிருக்கிறது. தம் மனைவியின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார். அந்த அம்மையார் காருக்குச் சென்று, மற்றொரு சாதாரணப் புடவையை உடுத்திக் கொண்டு திரும்பி வந்தார். அவர்கள் முதலில் உடுத்தியிருந்த விலையுயர்ந்த பட்டுப்புடவை, சின்னண்ணாவுக்குப்பரிசாக வழங்கப் பெற்றது. அடுத்த காட்சியில் அதை உடுத்திக் கொண்டு வரும் படியாகக் கட்டளையும் பிறந்தது. இளையராஜா காசி விஸ்வநாத பாண்டியனையும், அவரது கலையார்வத்தையும் எண்ணாம்போது இனி அப்படியொருவர் தோன்றுவாரா என்றே வியப்பாக இருக்கிறது. சாத்துார் முடிந்து திருச்சிக்குப் போனோம்.

திருச்சியில் எங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. திண்டாடினோம் என்றே சொல்லவேண்டும். திருச்சியில் பிரண்டு ராமசாமி கம்பெனிக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவரது பெற்றோர் யாரென்றே அவருக்குத் தெரியாது. மலையாள மொழி அவருக்குத் தெரிந்திருந்ததால் கேரளத்தில் எங்கோ பிறந்திருக்க வேண்டுமென்பது மட்டும் புரிந்தது.