பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168


என்ன ஆச்சரியம் இது-ஆகா!
என்ன ஆச்சரியம் இது
எங்கும் இருள் சூழ்ந்துல கிருண்டிருக்குது,
ஏழுநாள் ஓர் வாரத்துக்கு மேலானது .. (எ)

இது இருட்டுராஜா பாட வேண்டிய பாட்டு. என். எஸ். கிருஷ்ணன் பாடினார். ‘ஆகா!’ என்னும் இடத்தில் கொஞ்சம் தாளத்தைக் கவனித்து எடுக்கவேண்டும். பெரியண்ணா நாலைந்து முறை சொல்லிக் கொடுத்தார். தாளம் சரியாக வரவில்லை. பெரியண்ணாவுக்கு ஆத்திரம் வந்தது. ‘நிமிட்டாம்பழம்’ கொடுத்தார். நிமிட்டாம் பழம் என்றால் தெரியுமல்லவா? தொடையில் பெருவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்துக் கொண்டு கிள்ளுவது. சகிக்க முடியாத வலியெடுக்கும். இதெல்லாம் அந்த காலத்தில் சர்வ சாதாரணம். என். எஸ். கிருஷ்ணன் அழுதுகொண்டே பாடினார். அழுகை வந்தாலும் பாடுவதை நிறுத்தக் கூடாது. நிறுத்தினல் மேலும் பூசை விழும். என். எஸ். கிருஷ்ணன் ஆகா என்று அழுது கொண்டே பாடியது எங்களுக்கெல்லாம் சிரிப்புண்டாக்கியது. பாடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் பெரியண்ணா வெளியே சென்றார், நாங்கள் என். எஸ். கிருஷ்ணன் பாடியதுபோல் பாடிக் காட்டிச் சிரித்தோம்.

“ஏம்பா சிரிக்கிறீங்க... அண்ணாச்சிதானே அடிச்சாரு; பரவாயில்லே. அவரும் இந்தப்பாட்டைக் கத்துக்கிட சங்கரதாஸ் சுவாமிக்கிட்ட அடி வாங்கித்தான் இருப்பாரு. நானும் இனிமே எத்தனையோ பேரை இப்படி அடிக்கத்தான் போறேன். இது தானே நடிக பரம்பரை. இது புரியாமே ஏன் சிரிக்கிறீங்க?” என்றார் கலைவாணர். அப்போது அதன் பொருள் எங்களுக்குப் புரியாததால் மீண்டும் சிரித்தோம். திருமயம் முடிந்ததும் கம்பெனி காரைக்குடிக்குச் சென்றது.

காரைக்குடியில்தான் என். எஸ். கிருஷ்ணன் நகைச்சுவை நடிகராவதற்குரிய சூழ்நிலை உருவாயிற்று. சாவித்திரி நாடகத்தில் ஒருமுறை சாவித்திரியின் தந்தை அஸ்வபதியாக அவர் நடித்தார். அந்தக் காலத்தில் பெரும்பாலும் நன்றாகப் பாடக் கூடிய நடிகர்களாக இருந்தால் அரங்கில் பிரவேசிக்கும் போதே