பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173


சாலி, அவர் வந்த வேகத்திலேயே கிணற்றில் குதித்து மூழ்கினார். அடுத்த நிமிடத்தில் சங்கரனையும் தூக்கிக் கொண்டு மேலே வந்தார். எல்லோரும் வியப்போடும், கவலையோடும் அவரையே பார்த்துக்கொண்டு நின்றோம். கரைக்குக் கொண்டு வந்து, மூர்ச்சித்துக் கிடந்த சங்கரனைத் தலைமீது வைத்துக் கொண்டு சுற்றினார். சங்கரன் வாய்வழியாகத் தண்ணிர் வெளியேவந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு சங்கரனுக்கு மூச்சு வந்தது. எங்களுக்கும் உயிர் வந்தது.கோபாலபிள்ளையின் துணிவை எல்லோரும். பாராட்டி வாழ்த்தினார்கள்.

கோபால பிள்ளை இவ்வாறு பலசந்தர்ப்பங்களில் எங்களுக்கு மகத்தான உதவிகள் புரிந்திருக்கிறார். இவர் கோட்டயத்திலே பிறந்தவர். ஆர்மோனியம் கே. டி. கடராஜ பிள்ளை நடத்தி வந்த சிறுவர் கம்பெனியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தவர். பின்னால் தத்துவ மீனலோசினி வித்துவ பாலசபையில் ஆடையணிவிக்கும் பொறுப்பில் பல ஆண்டுகள் சிறப்பாகச் செயலாற்றியவர். நாங்கள் சொந்தக் கம்பெனி தொடங்கியபின் உரிமையோடு எங்களிடம் வந்து, பணியாளராக மட்டுமல்லாது, பாதுகாப்பாளராகவும் இருந்து வந்தார். இவருடைய வலிமையும் வீரமும். எங்கள் குழுவுக்குத் தோன்றாத் துணையாக இருந்து வந்தன.